தமிழக பாஜக தலைவர் மீது டெல்லிக்கு போன புகார்கள்

சட்டமன்றத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கான இடைவெளியில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் களத்தில் தங்களது நிர்வாகிகள் செயல்பட்ட விதம் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள். தலைமை ஆய்வு நடத்துவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகளே தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகிறார்கள்.

இந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனைப் பற்றி அக்கட்சியின் தேசிய தலைமைக்கு தமிழக நிர்வாகிகள் புகார்களை அனுப்பி வருகிறார்கள்.

“தமிழக பாஜக தனித்து நின்றால் 60 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என்று தேர்தலுக்கு அதிரடியாக பேட்டியெல்லாம் கொடுத்தார் எல். முருகன். ஆனால் அமித்ஷா வந்து பேசிய பிறகும் கூட தமிழகத்தில் பாஜகவுக்கு 20 தொகுதிகளைத்தான் அதிமுக கொடுத்தது. தேர்தலையும் சந்தித்து முடித்துவிட்ட நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் டெல்லி தலைமைக்கு சரமாரியான புகார்களை அனுப்பியுள்ளனர்.

’எல்.முருகன் தனக்காக தாராபுரம் தொகுதியை கேட்டு வாங்கினார். ஆனால் அதுபோல கட்சி நிர்வாகிகளுக்கு உரிய தொகுதிகளை அவர் அதிமுகவிடம் வாதாடிப் பெறவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் பெரும்பகுதியை தனது தொகுதியிலேயே அவர் செலவிட்டிருக்கிறார். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் குறைவுதான். தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தனியாகவே நிற்கலாமென்று கட்சியின் சீனியர்கள் வற்புறுத்திய நிலையில், ‘அதிமுக கூட்டணியில் நின்றால்தான் சில எம்.எல்.ஏ.க்களாவது நாம் பெற முடியும்’ என்று தலைமைக்கு கருத்து அனுப்பினார் முருகன்.

இந்நிலையில் கூட்டணியில் பாஜக நின்ற 20 தொகுதிகளிலும் முழுமையான அளவில் பூத் கமிட்டிகள் போடப்படவில்லை. அதிமுகவினரும், பாமகவினரும் கூட இதுபற்றி தத்தமது கட்சித் தலைமைகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள்.

மேலும் பிரச்சாரத் திட்டத்தை சரியாக வகுக்கவில்லை. மாநிலத்தில் இருக்கும் பாஜக முக்கியப் பிரமுகர்களை தமிழகம் முழுமைக்குமான பிரச்சாரத்தில் பயன்படுத்த வில்லை. மாநில நிர்வாகிகள் பலர் பிரச்சாரத்துக்கே செல்லாமல் சென்னையிலேயே தங்கிவிட்டனர். முருகன் தனது தாராபுரத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால், அவர் இதையெல்லாம் கவனிக்கவில்லை. பிற மாநிலங்களில் இருந்து வந்த தலைவர்களையும் மத்திய அமைச்சர்களையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சீட் கொடுத்ததிலும் பெரும் குழப்பம் நடந்திருக்கிறது. பாஜகவுக்காக பல ஆண்டுகள் உழைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்காக கேட்டு வாங்கிய மதுரை வடக்கு தொகுதியை, திமுகவில் இருந்து வந்த எம்.எல்.ஏ. சரவணனுக்காக எந்தத் தயக்கமும் இன்றி கொடுக்க தேசிய தலைமைக்கு சிபாரிசு செய்தார் முருகன். இதில் வேறு சில உள் விஷயங்களும் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. சேப்பாக்கத்தில் குஷ்பு என்று அவரிடமே கிட்டத்தட்ட சொல்லப்பட்டு அவர் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், சேப்பாக்கத்தை கேட்டு வாங்காமல் ஆயிரம் விளக்கை வாங்கி அங்கே குஷ்புவை நிற்க வைத்ததும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விவகாரம்” என்று பாஜக தலைவர் முருகன் மீது தேசிய தலைமைக்கு புகார்கள் சென்றிருக்கின்றன.

இதுபற்றி கமலாலய வட்டாரத்தில் பேசியபோது, “ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்ததும் இதுபோல புகார்கள் தேசிய தலைமைக்குச் செல்வது வழக்கமானதுதான். முருகன் பாஜக தலைமைப் பதவிக்கு வந்த பிறகுதான் பாஜகவுக்கு புதிய ரத்தம் பாய்ச்சினார். ஆனால் முருகன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத சீனியர் தலைவர்கள் முருகன் பேரை ரிப்பேர் ஆக்கும் முயற்சியில் தேர்தலுக்கு முன்பே இறங்கினார்கள். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக தேர்தலைப் பயன்படுத்தி முருகன் மீது புகார்களை அனுப்பியிருக்கலாம்” என்கிறார்கள்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இருக்கப் போவதில்லை.

Related posts

Leave a Comment