அரசியலிலிருந்து விலகுவதாகத் தேர்தலுக்கு முன்பு சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியிலிருந்து தொண்டர்களிடமும், கட்சி பிரமுகர்களிடமும் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்றும் கூட சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசும் அந்த ஆடியோவில்,
சசிகலா: ஹலோ…ஆனந்தன் நல்லா இருக்கீங்களா… ஆனந்தன்..
ஆனந்தன்: நல்லா இருக்கேன்மா… நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா…
சசிகலா: என்ன இப்படி சொல்றீங்க… உங்களை நல்லா தெரியும்… எப்படி மறக்க முடியும்
ஆனந்தன்: தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கிறோமா நாங்க, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… எங்களுக்காக வாங்க…
சசிகலா: ஒண்ணும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும்.
ஆனந்தன்: அரசியலிலிருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுட்டேன். அம்மாவுக்காகவும், இந்த கட்சிக்காகவும் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை எங்களால் மறக்கவே முடியாது?

சசிகலா: சரி…. சரி… பழைய ஆட்கள் எல்லோருக்குமே தெரியுமே…
ஆனந்தன்: உங்களைக் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என மனசாட்சி இல்லாமல் பேசுறாங்களேம்மா… இந்த கட்சியை காப்பாத்த வேண்டிய, தொண்டர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கும்மா?
சசிகலா: நிச்சயமா… அதான் நான் எல்லோர்கிட்டேயும் பேச ஆரம்பிச்சுட்டேன். நிறைய கடிதம் வருது. தொண்டர்கள் மிகவும் மன குமுறலுடன் எழுதுறாங்க… அதெல்லாம் பார்த்துட்டுதான் என் மனசு ரொம்ப வருத்தமா இருக்கு. அதுக்குப்பிறகு தான் இப்போ பேச ஆரம்பிச்சுருக்கேன். கட்சி நம் கண் எதிரேயே இப்படி ஆகும்போது மிகவும் வருத்தமா இருக்கிறது. கட்சி இப்படியெல்லாம் போகுதே அப்படிங்குறப்போ, நிச்சயம் தொண்டர்களுக்காக நான் வருவேன்.
ஆனந்தன்: அம்மாவுக்கு பிறகு நீங்கள்தான் எங்கள பொறுத்தவரை அம்மா. இந்த கட்சியை பழையபடி வளர்க்கனும்.
சசிகலா: நிச்சயமா நிச்சயமா நல்லா கொண்டு வந்துடலாம். தலைவர் காலத்துக்கு பிறகு அம்மா எப்படி கட்சியை வைத்திருந்தார்கள்… எப்படி கட்சியை வளர்த்து கொண்டு வந்தாங்க… அதேவேலையை நாமும் செய்வோம்.
ஆனந்தன்: கட்சியை காப்பாத்த உங்களால்தான் முடியும்… எங்களை உங்க விசுவாசிகளாக ஏத்துக்கோங்க…
சசிகலா: கவலைபடாதீங்க… வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
ஆனந்தன்: எல்லோரும் நல்லா இருக்காங்க.
சசிகலா: கொரோனா பாதிப்பு குறையட்டும். உங்களையெல்லாம் நேரில் சந்திக்கிறேன்.
ஆனந்தன்: கட்சியில் எனக்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர் பதவிகளையெல்லாம் அம்மாகிட்ட சொல்லி நீங்க தான் வாங்கி கொடுத்தீங்க. அமைச்சராகவும் ஆக்குனீங்க. காலத்துக்கும் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்.

சசிகலா: சரி ஆனந்தன் விரைவில் சந்திப்போம் என்று முடிகிறது அந்த ஆடியோ.
இதனிடையே, சசிகலா, அதிமுகவினருடன் பேசவில்லை, அமமுக தொண்டர்களிடம்தான் பேசுகிறார் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், “கருவாடு மீனாகிவிட முடியாது என்று காளிமுத்து சொன்னார். ஆனால், கருவாடு கூட மீனாகிவிடலாம். சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார்.
இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் சி.வி. சண்முகத்துக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று சசிகலா மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனத்தில் உள்ள ரோசணை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் அளித்த புகாரில், “கடந்த ஜூன் 7ஆம் தேதி சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகங்களிடம் பேட்டியாகக் கொடுத்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள்.
மேலும், கைப்பேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இன்றுவரை சுமார் 500 போன் அழைப்புகள் செய்துள்ளனர். இன்னும் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுல் தான் காரணம். எனவே சசிகலா மற்றும் எனது அலைப்பேசிக்குக் கால் செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
“2006 மே 8ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த போது, சி.வி.சண்முகம் தரப்புக்கும், பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சி.வி.சண்முகம் வீடு முன்பு முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் சி.வி.சண்முகத்துக்கும், அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த பாதுகாப்பை எடுக்க போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த சூழலில்தான் அவருக்கு செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக சசிகலா ஆதரவாளர்கள் மிரட்டல் கொடுப்பதாகப் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மீது விசாரணை நடத்தி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.