பன்னீர்செல்வம்தான் என் சாய்ஸ் – சசிகலா

சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோ சில வாரங்களாகவே வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில்… அவர்களில் 15 பேரை திடீரென அதிமுகவில் இருந்து நீக்கி நேற்று (ஜூன் 14) அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இன்று (ஜூன் 15) சசிகலாவின் இன்னொரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த சிவனேசன் என்ற அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசும் ஆடியோவில், ‘இனி என் முதுகில் குத்த இடமே இல்லை’என்று குறிப்பிட்டுள்ளார்,

ஓபிஎஸ்சைதான் நான் முதல்வராக தொடர வைக்க நினைத்திருந்ததாகவும் ஆனால் அவராகவேதான் ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தேனி சிவனேசனிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா.

“அந்த சமயத்துல அவருதானப்பா போனாரு… இல்லேன்னா அவரைத்தானே நான்…’என்று சிவனேசனுக்கு பதில் சொன்ன சசிகலா தன்னுடன் பேசிய தொண்டர்களை கட்சியை விட்டு நீக்கியதையும் கண்டித்துள்ளார்.

“என்னோட பேசுறாங்க, நீங்க வாங்கம்மானு கூப்பிடுறாங்கன்றதுக்காக கட்சிக்காரவுங்களை கட்சியிலேர்ந்து எடுத்தீங்கன்னா, ஒருத்தர் ரெண்டு பேர் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குறதா? இது கட்சி நடத்துறவங்களுக்கு அழகா? தொடர்ந்து இந்த கட்சிக்கு விசுவாசமா உழைச்சது தப்பா? எனக்கு பாத்தீங்கன்னா… முதுகுல குத்திக் குத்தி இனிமே குத்துறதுக்கு முதுகுல இடமே இல்லை. ஆனா இப்ப தொண்டர்கள் முதுகுலயும் குத்தினா அதை வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? கட்சிய காப்பாத்த நான் கண்டிப்பா வருவம்ப்பா. தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம். நான் வரவேண்டியதுக்கான நேரம் வந்துடுச்சு” என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார் சசிகலா.

இதன் மூலம் சசிகலா தனது அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தத்தில் இருப்பது தெரிகிறது.

தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதே துணைத் தலைவர் பதவியை பன்னீருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் எடப்பாடி. அப்போதுதான் பன்னீரை மையமாக வைத்து சசிகலா வேறு ஏதும் திட்டம் போட முடியாது என்றும் கருதினார் எடப்பாடி. அதனால்தான் சொன்னபடியே ஓபிஎஸ் சை சம்மதிக்க வைத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்கச் செய்துவிட்டார். இந்த நிலையில்தான், “நான் ஓபிஎஸ்சைதான் முதல்வர் பதவியில் தொடர வைக்க நினைத்திருந்தேன். ஆனால் அவராகவே போய்விட்டார்”என்று இப்போது கூறியுள்ளார் சசிகலா.

இதன் மூலம் பன்னீருக்கு வெளிப்படையான தூண்டிலை வீசியிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் தூண்டிலில் சிக்கப் போவது பன்னீர் என்னும் மீனா, வெறும் பாசிதானா என்பதற்கு இன்னும் சில வாரங்களில் விடை கிடைத்துவிடும்!

Related posts

Leave a Comment