தமிழக அரசின் 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொரோனா பரவல் தமிழகத்தில் 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்தினார். இதில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது , கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், கல்வியில் – வேலைவாய்ப்பில் – சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும்.
வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு!
மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!
எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டுக் காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்றார்.
பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும். அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக – தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், “மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று குறிப்பிட்ட முதல்வர், ”காலிப் பணியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தினார்.