காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 24) ஆஜரானார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் வருகிறது. நீரவ் மோடி, லலித் மோடி நரேந்திர மோடி” என்று குறிப்பிட்டுப் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் மோடி சமூகத்தையே இழிவுபடுத்திப் பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தைச் சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24ஆம் தேதி ராகுல் காந்தி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏ.என்.தவே உத்தரவிட்டிருந்தார்.
ஏற்கனவே ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி அவதூறாக எதுவும் பேசவில்லை என்று ராகுல்காந்தி விளக்கமளித்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று நேரில் ஆஜரானார்.
நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், உயிர் வாழ்வதற்கான ரகசியமே அஞ்சாமல் இருப்பது தான் என்று பதிவிட்டுள்ளார்.