ஆளுநர் உரை முன்னோட்டம் மட்டுமே – மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை வெறும் ட்ரெயிலர் தான் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். அவரது உரையில், விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும், நீட் தேர்வுக்குச் சட்ட முன்வடிவு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், ஆளுநர் உரை ஏமாற்றமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பயிர்க் கடன், கல்விக் கடன், நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், 16 ஆவது சட்டப்பேரவையின் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 24) உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “கடந்த 2 நாட்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். உரையாற்றியவர்களின் கருத்துகளை அரசுக்கு வழங்கிய ஆலோசனைகளாக எடுத்துக்கொள்ளப்படும்.

5 ஆண்டுக்கால ஆட்சி உரிமை கொண்ட அரசு இது. இதில் செயல்படுத்தக் கூடிய, கொள்கைகள், திட்டங்களை ஆளுநர் உரையில் மட்டும் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது அரசின் ஓராண்டுக்கால கொள்கை சுருக்கம் தான். ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான். அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், ‘இது வெறும் ட்ரெயிலர் தான்”. முழு நீள படத்தை விரைவில் வெள்ளித் திரையில் காணுங்கள் என்று சொல்வது, போல இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ளவுள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், சவால்கள் என அனைத்தும் இந்த பேரவையில் வைக்கக் கூடிய நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும்.

பொறுத்தார் பூமி ஆழ்வார். அதுபோன்று 10 ஆண்டுகளுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதில் ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment