கொரோனா இரண்டாம் அலைக்கு சட்டமன்ற தேர்தலே காரணம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவலுக்குச் சட்டமன்றத் தேர்தலே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2016 முதல் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மாநகராட்சி, நகராட்சிகள்தான். எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி தேர்தல்கள் 21 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதுஇதை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவலுக்கு சட்டமன்றத் தேர்தல்தான் காரணம். மீண்டும் தேர்தல் நடத்தினால் பிரச்சாரங்கள் நடைபெறும். கட்சியினர், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவர். கொரோனா பரவலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக இது அமைந்துவிடும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முடிவு வந்த பிறகே இந்த வழக்கை விசாரிக்க முடியும் என்று குறிப்பிட்டு வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

முன்னதாக, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் 9 மாவட்டங்களுக்குச் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை முடித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், தேர்தலை நடத்துவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Leave a Comment