ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு 3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 2 கோடியும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 1 கோடியும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை இன்று(ஜூன் 26) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஏற்கனவே வாள் வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மீதமுள்ள 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கினார்.
இதையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,” விளையாட்டு போட்டிகளில் டீம் ஸ்பிரிட் என்பது மிக முக்கியமானதாக கருதப்படும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தனித்தனி திறமை இருந்தாலும், வீரர்கள் அனைவரும் சேர்ந்து களத்தில் ஓரணியாக செயல்படும்போதுதான் வெற்றி சாத்தியமாகும். அந்த டீம் ஸ்பிரிட் இங்கே இருக்கிறது. உடலுக்கும், மனதுக்கும் ஊக்கம் தரக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று சொல்வார்கள். அரசியலை விளையாட்டாக நினைப்பவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். விளையாட்டு துறையை விளையாட்டாக எடுத்து கொண்டால், விளையாட்டாக போய் விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால் தான், விளையாட்டு துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டுக்கு பெருமை, அடுத்த தலைமுறைக்கு வலிமை.கிரிக்கெட்டில் தோனி மாதிரியான வீரர்கள் சிக்சர் அடிக்கும்போது, அரங்கில் இருக்கும் அத்தனை பேரும், தாங்களே சிக்சர் அடித்ததுபோன்று உணர்வு பெறுவார்கள். விளையாட்டு நிகழ்ச்சியை டிவியில் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கும் அதே உணர்வுதான் ஏற்படுகிறது. அந்தவகையில் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக் கூடியவர்கள்தான் விளையாட்டு வீரர்கள்.
விரைவாக செயல்படுதல், துணிவாக முயற்சி செய்தல், உடல் வலிமையை பராமரித்தல் ஆகிய மூன்று பண்புகளும் வீரர்கள், வீராங்கனைகளுக்கும் இருக்கும். அதே பண்புகளை அரசும் கருத்தில் வைத்து செயல்படும்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வேன். விளையாட்டு வீரர்களின் தேவைகளை அறிந்துள்ளதால், அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். சென்னை மேயராகவும், மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்தபோது மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து காட்சி போட்டிகளில் விளையாடியுள்ளதை இன்று நினைக்கிறேன்.
12 வயதுக்குள் விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளம் காண வேண்டும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதியும், ஊக்கமும் அவசியம். திமுக தேர்தல் அறிக்கையில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தோம். நிச்சயம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும். தமிழ்நாட்டு முதல்வராக மட்டுமில்லாமல், ஒரு கிரிக்கெட் வீரராகவும் இருந்து உங்களது தேவைகளை பூர்த்தி செய்வேன்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும்” என தெரிவித்தார்.