திமுகவின் பிடீம் காங்கிரஸ்-அண்ணாமலை

தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், பிராந்திய கட்சியாக மாறிவிட்டதாகவும், திமுகவின் பி-டீம் ஆகவும் செயல்படுகிறது எனவும் பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை, “புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆர்டிகிள் ஒன்றில் இடம்பெற்றுள்ள ’யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வார்த்தைகளையே அம்மாநில ஆளுநர் தமிழிசை பயன்படுத்தியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் அவரே தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசு என்பதன் மூலம் திமுக சொல்ல வருவது என்ன? அதன் உள்ளர்த்தம் என்ன? 2004ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருந்தபோது அந்த வார்த்தையைப் பயன்படுத்தாதது ஏன்?

2011-2021 வரை மின் உபரியாக இருந்த மாநிலம், இரண்டு மூன்று மாதங்களில் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமாக எப்படி மாற முடியும்? மின் தடைக்கு அணில்கள்தான் காரணம் என்று அமைச்சர் சொல்லியிருந்தார். இந்தியா உருவான காலத்தில் இருந்தே அணில்கள் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அணில்கள் வரவில்லை. 2011-2021 வரையும் அணில்கள் இருந்தன. அப்போதெல்லாம் ஏற்படாத மின்வெட்டு தற்போது ஏன் ஏற்படுகிறது?

அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு ஏற்ற பின், மின் துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மாற்றப்பட்டனர். அரசியலுக்காக யாரோ சுவிட்சை ஆஃப் செய்து ஆன் செய்துவிடுகிறார்கள் என்ற வாதமும் ஏற்புடையதல்ல. இதில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், அமைச்சர் மின் தடைக்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் கொள்கையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, பிராந்திய கட்சியாகவும், திமுகவின் பி-டீம் ஆகவும் செயல்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசுக்கு ரூ.37 முதல் ரூ.39 வரை வரி வருவாய் கிடைக்கிறது. எனவே ரூ.5 முதல் ரூ.7 வரை விலையை பல மாநிலங்கள் குறைத்து இருக்கிற நிலையில், தமிழ்நாடு அரசும் குறைக்கலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் டீசல் விலையைக் கடன் பத்திரங்கள் பெற்றுக் குறைத்தார்கள் என்று சொல்லலாம். அதற்கான அசல் மற்றும் வட்டியான ரூ.1.10 லட்சம் கோடியைத் தற்போது பாஜக அரசுதான் செலுத்தி வருகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் ரத்து செய்யப்படும் என்றார்கள். வந்தவுடன் கமிட்டி அளிக்கும் பரிந்துரையில் நீட் ரத்து செய்யப்படும் என்றார்கள். பின்பு, தேர்வு இருக்கலாம் அதனால் மாணவர்கள் தயாராக வேண்டும் என்றனர். தற்போது நீட் இருக்கும் என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மாணவர்கள்தான். அரசியலுக்காகதான் எல்லாம் சொல்லப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் நிறைய இடங்களில் நின்று வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் கூட்டணி கட்சியில் இருப்பதால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் கொள்கைகளை மாற்றி பேச மாட்டோம்” என்று பேசினார்.

Related posts

Leave a Comment