குடும்பத்தலைவிகளுக்கு 1000ம் ரூபாய் எப்போது?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்தச் சூழலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில்கூட இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். மக்களின் நலனுக்காக 4,000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 99 சதவிகிதம் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுவிட்டது. விடுபட்டவர்களையும் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.

அதுபோன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும். எந்த குறையும் இல்லாமல் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் 4,000 மெகாவாட் அனல் மின் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் தொலைநோக்கு மின்சார திட்டத்தின் பிதாமகன் கலைஞர்தான். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. வீடுகள் மற்றும் விவசாய பணிகளுக்குத் தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related posts

Leave a Comment