அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பட்டத்து அரசன். புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ரவி காலே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஏ.சற்குணம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படம் குறித்து நாயகன் அதர்வா பேசுகையில், “சற்குணம் சார் இந்த கதையை என்னிடம் சொன்ன போதே நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதே சமயம், முதலில் என்னிடம் கதை சொல்லும் போது இதில் ராஜ்கிரண் சார் இல்லை. ஆனால், ராஜ்கிரண் சார் போன்ற ஒருவர் இந்த வேடத்தில் நடிக்கிறார் என்று தான் இயக்குநர் சொன்னார். ராஜ்கிரண் சார் நடித்தால் இந்த படத்தை பண்ணலாம், இல்லை என்றால் வேண்டாம், என்ற முடிவில் தான் அனைவரும் இருந்தோம். அதேபோல் ராஜ்கிரண் சார் இந்த படத்துக்குள் வந்து விட்டார். அவர் வந்ததும் படம் மிகப்பெரிய படமாக மாறி விட்டது. கபடி போட்டியை தாண்டிய ஒரு கதை இருக்கிறது. அது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்” என்றார்.
நாயகி ஆஷிகா ரங்கநாதன் பேசுகையில், “எனக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. இருந்தாலும் இதில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்து நடிக்க வைத்தார்கள். ரொம்ப நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சற்குணம் சாருக்கு நன்றி. அடுத்த முறை பேசும் போது நிச்சயம் தமிழை கற்றுக்கொண்டு நன்றாக பேசுவேன். ” என்றார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “சற்குணம் சார் படத்தில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த கதையை என்னிடம் சொல்லும் போது ஹீரோ யார்? என்று கேட்டேன். அதர்வா என்றதும் எனக்கு கூடுதல் சந்தோஷம். காரணம் அவரை என் தம்பியாகவே நான் பார்க்கிறேன். அப்பா தயாரித்த முதல் படத்தில் முரளி சார் தான் ஹீரோ. அப்போது இருந்தே அவர் எங்கள் குடும்ப நண்பராகி விட்டார். ஒரே பகுதியில் நாங்கள் இருந்ததால் அடிக்கடி அவரை சந்தித்து பேசுவோம், அதர்வாவையும் அடிக்கடி பார்த்து பேசுவேன். தமிழ் சினிமாவில் அனைத்து திறமையும் கொண்ட ஹீரோக்களில் அதர்வாவும் ஒருவர். அவரிடம் யூத்தாக நடிக்க வேண்டும் என்று நான் சொல்வேன். இதயம்-2 படம் எடுத்தால் அதர்வா நடிக்கலாம், எப்போதும் பிரஷ்ஷாக இருக்கும் ஒரு நடிகர். காதல், ஆக்ஷன் என அனைத்துக்கும் செட்டாகும் அழகான முகம் அவருக்கு. அவர் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார் என்றாலும், இதை விட பெரிய இடத்திற்கு அவர் வரவேண்டும். அது தான் என் ஆசை.
ராஜ்கிரண் சாருடன் நடித்தது எனக்கு பெருமை. நான் பாண்டியன் மாஸ்டரிடம் சண்டை பயிற்சி எடுக்கும் போது ராஜ்கிரண் சார் போல் ஒரே பஞ்சில் சாய்க்கும்படி சொல்லிக்கொடுங்கள் என்பேன். அவர் போல அவரால் மட்டுமே செய்ய முடியும் என்று சொல்வார், அவர் அடிக்கும்போது அந்த பவரை முகத்திலேயே காட்டுவார். மிக இயல்பான நடிகர், அவருடன் நடித்தது மகிழ்ச்சி’’ என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், “தமிழில் ரொம்ப நாளாக வாய்ப்பே இல்லை. தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தமிழ் சினிமா நம்மை ஒதுக்கிவிட்டது. இன்னும் நிறைய வேடங்கள் நடிக்கவில்லையே என்று தோன்றியது. அந்த சமயத்தில் தான் இந்த பட வாய்ப்பு வந்தது. சற்குணம் என்னிடம் கதை சொல்லும் போது, படத்தில் உங்கள் அப்பா ராஜ்கிரண் என்றார். பொதுவாக அப்பா வேடம் என்றாலே என்னை தான் அழைப்பார்கள், அதுவும் இப்போது கொஞ்ச நாட்கள் இல்லாமல் இருந்தது. இந்த சமயத்தில் ராஜ்கிரண் சாருக்கு நான் மகன் என்றதுமே எனக்கு வித்தியாசமாக இருந்தது.
படப்பிடிப்பு தொடங்கிய போது ராஜ்கிரண் சார் செட்டுக்கு வந்தார். அப்போது அவர் ஒரு யோகி போலவே எனக்கு தெரிந்தார். அவருடன் நடித்தது எனக்கு பெருமை. இதைவிட ஒரு நடிகனுக்கு வேறு என்ன வேண்டும்…அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதர்வா ரொம்ப எனர்ஜியான நடிகர். அவர் இதை விட பெரிய நிலைக்கு வர வேண்டும். பட்டத்து அரசன் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குனர் சற்குணம் பேசுகையில், எங்க ஊரில் கபடி போட்டி நடக்கும் இடத்தில் இருந்தேன். அப்போது பல அணிகள் அங்கு வந்தார்கள், ஒரு அணி மட்டும் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. காரணம், அந்த அணியில் தாத்தா,அப்பா, பேரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். அது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த அணி பற்றி விசாரிக்கும் போது தான் தெரிந்தது அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று. அதை வைத்து தான் இந்த கதையை எழுதினேன். ஒரு குடும்பத்தில் கபடி விளையாடுகிறார்கள், அது ஏன்? என்ற காரணத்தை வைத்து நான் கற்பனையாக எழுதிய கதை தான் இது.
இது வெறும் கபடி படம் மட்டும் அல்ல. தாத்தா பேரன் இடையிலான பாசப்போராட்டம், இரண்டு குடும்பத்திற்கு இடையிலான வாழ்க்கை என்று ஒரு அழகான குடும்ப திரைப்படமும் கூட. தஞ்சை மாவட்டத்தில் தார பங்கு என்று சொல்வார்கள். ஒருவருக்கு இரண்டு தாரம் என்றால், அவர்களுக்கு சரிசமமாக சொத்துக்களை பிரிக்க வேண்டும். ஒரு தாரத்திற்கு பத்து பிள்ளைகள் என்றாலும் அவருக்கு ஒரு பாதி, மற்றவருக்கு ஒரு பிள்ளை என்றாலும் அவருக்கு ஒரு பாதியாக தான் சொத்தை பிரிப்பார்கள். அதாவது தாரத்தின் அடிப்படையில் தான் சொத்து பிரிக்கப்படும். அதை வைத்து ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இது மிகவும் புதிதாக இருக்கும்.
அதர்வா இந்த படத்திற்காக பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். மீசை வளர்ப்பதில் கூட அதிகம் கவனம் செலுத்தினார். அதேபோல், ராஜ்கிரண் சார் இந்த படத்தை பெரிய படமாக்கி விட்டார். இதில் அவர் மூன்று கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதுவரை எந்த படத்திலும் அவர் மூன்று கெட்டப்புகளில் நடிக்கவில்லை. இந்த படத்தில் தான் 35 முதல் 45 வயது வரை ஒரு கெட்டப்பும், 45 வயதிக்கு பிறகான கெட்டப் மற்றும் 70 வயது கெட்டப் என்று மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்த மூன்று கெட்டப்புகளிலும் மூன்று விதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயம் அவர் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பார்.
நான் எந்த ஒரு வெளிநாட்டு படத்தையும் பார்த்து காப்பியடித்து கதை எழுதுவதில்லை. நான் போகும் ஊர் மற்றும் அங்கு சந்திக்கும் மக்களை வைத்து தான் கதை எழுதியிருக்கிறேன். இந்த படத்தின் கதையும் அப்படித்தான் எழுதப்பட்டது. இப்படி ஒரு எதார்த்தமான கதையை தயாரிக்க முன் வந்த லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் சார், தமிழ் குமரன் சார் மற்றும் லைகா நிறுவனத்தை சார்ந்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.