மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

கிறிஸ்துமஸ் தினத்தின் முன்னிரவு நேரத்தில் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள் இடையே மெல்லிய புரிதல் ஏற்படுகிறது. அந்தப் புரிதலைத் தொடர்ந்து நடக்கும் சம்பவஙகள் அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் எப்படி தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது, என்பதை த்ரில்லும் மர்மமும் கலந்து பேசியிருக்கும் திரைப்படமே “மெரி கிறிஸ்துமஸ்”.

ஆல்பர்ட் என்கின்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.  அவருடைய திரைப்பயண வரலாற்றில் இப்படி ஒரு கதாபாத்திரம் அவர் செய்ததாக நினைவில்லை.  புதிரான மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம். தன் பாக்கெட்டில் எப்பொழுதும் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் காட்டி, தன் காதலியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தருணம் அலாதியானது.  அதுபோல் இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு சந்தித்த மரியாவாகிய கத்ரீனா கைஃப் பேராபத்தில் சிக்கிக் கொள்ளும் போது, தன்னிலை மறந்து போய் உதவ முன்வந்து, பின்னர் தடுமாறி பின் தங்கும் இடத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.  இறுதிக்காட்சியில் தன் மீதான பிடி இறுகுவதை உணரும் அந்த நொடியில் அவர் முகத்தில் நடக்கும் மாற்றங்கள் நடிப்பின் வர்ண ஜாலங்கள்.  படத்தின் கடைசி ப்ரேமில் காவல் நிலையத்தின் பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவர் மரியாவைப் பார்த்து சிரிக்கும் அந்த சிரிப்பு, அன்றைய தினமான கிறிஸ்துமஸில் பிறந்த இயேசு பிரானின் கள்ளம் கபடமற்ற தியாகத்தையும் உயிர்பலியையும் ஒத்திருந்து, பாவத்தின் மீட்பராக அவரை அடையாளம் காட்டுகிறது.  இது போன்ற ஒரு கதைக்களத்தில் எந்தவொரு முன்னணி நாயகர்களும் நடிக்கத் தயங்கவே செய்வார்கள். ஏனென்றால் எதிர்மறையான செயல்பாடுகள் நிரம்பிய கதாபாத்திரம், கதையின் மையம் பெண் கதாபாத்திரமான கத்ரீனாவை முன்னிட்டே பெரும்பாலும் நகரும்படியான கதை அமைப்பு, கிட்டத்தட்ட நாயகனுக்கு, நாயகிக்கு தோள் கொடுத்து உதவும் கதாபாத்திரம் தான். இருப்பினும் இது எதைப் பற்றியும் யோசிக்காமல் கதையின் நாயகனாக நடித்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ஹாட்ஸ் ஆஃப்.

ஐந்து வயது குழந்தையின் தாயாக மரியா கதாபாத்திரத்தில் கத்ரீனா கைஃப். கையறு நிலையில் ஒரு ரெஸ்டாரண்டில் குழந்தையுடன் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய நள்ளிரவில் அறிமுகமாகும் அந்த கணமே அவரின் மீது பெரும் பச்சாதாபம் பிறக்கிறது.  தன் வாழ்க்கையைப் பற்றி அவர் விளக்கத் துவங்கும் போது அந்தப் பச்சாதாபம் இன்னும் அக்கதாபாத்திரத்தின் மீது கூடுகிறது.  ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக விஜய் சேதுபதியுடன் பழகத் துவங்கி, சில மணி நேரங்களிலேயே அந்த நடவடிக்கையால் நாமே பழி ஆகிவிடுவோமோ என்று அஞ்சி பின் வாங்கும் இடத்தில், முகத்தில் சோகம், காதல், அவமானம், தவிப்பு என அத்தனை உணர்வுகளையும் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.  குழந்தைக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்கின்ற பதட்டத்தில் அவர் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் அறையை நோக்கி ஓடும் ஓட்டத்தில் அவரோடு சேர்ந்து நம் மனமும் துள்ளிக் கொண்டு ஓடுகிறது.  குதூகலமான கொண்டாட்டத்தின் ஊடாக அவர் ஆடும் ஆட்டம் நம் திடமான மனதை சற்று ஆட்டிப் பார்க்கிறது. கடைசி காட்சியில் தன் குழந்தை பேசிய சந்தோஷத்தில் ஆசையுடன் ஓடிவந்து அவளை அள்ளி அணைத்து, பின் தன் நிலை உணர்ந்து, தன் வாழ்வை சூன்யம் கவ்வ வருவதைக் கண்டு கண் கலங்கி நிற்கும் தருணத்தில் நடிப்பால் நம்மை கலங்கடிக்கிறார்.

விசாரணை அதிகாரியாக வரும் சண்முக பாண்டியனும், அவருடன் ஏட்டய்யாவாக வரும் ராதிகா சரத்குமாரும் ரசனையான தேர்வு. ஒரு வழக்கின் விசாரணையை இருவரும் எதிர் எதிர் துருவத்தில் இருந்து அணுகத் துவங்கினாலும், இருவரும் ஒருவரையொருவர் எதிரியாக பாவிக்காமல் வழக்கு மீது காட்டும் ஆர்வம், படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.  “இன்னொரு முறை ஒன் பர்ஸ் தொலைஞ்சது உன்னை கொன்னேபுடுவேன்..” என்று கவின் ஜே.பாபுவை எச்சரிக்கும் சண்முகபாண்டியனும், “இவனோட ஜட்டி சூட்டால தான் இந்த கேஸ் முடிஞ்சிருக்கு…” என்று கூறும் ராதிகா சரத்குமாரும் கிட்டத்தட்ட காமெடி போலீஸ் போன்று தோற்றம் தந்து, தங்கள் விசாரணையில் கிடுக்குப்பிடி போடும் இடம் படத்திற்கான முக்கிய திருப்பம் நடக்கும் இடம்.  ஜூனியர் கான்ஸ்டேபிளிடம் போலீஸ்காரரின் பெருமையை விளக்க, கதை கூறும் இடத்திலும், விசாரணை களத்திலும் இயல்பான வித்தியாசமான நடிப்பால் ராதிகா அப்ளாஸ் அள்ளுகிறார். சண்முகபாண்டியன் தான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதை பிசிறில்லாத தன் நடிப்பினால் பறைசாற்றுகிறார்.

பிரடெரிக் ஆக தேவாலயத்தில் அறிமுகமாகி, தன் பர்ஸ் தொலைந்துவிட்டது என்று நாடகம் ஆடும் கவின்.ஜே.பாபு-வும் கூத்துப் பட்டறை நடிகர் தான். விஜய் சேதுபதிக்கு சீனியர் அவர். அவர் வரும் இடங்களில் எல்லாம் காமெடி களை கட்டுகிறது. அதிலும் குறிப்பாக கடைசிக் காட்சியில் காவல் நிலையத்தில் தன் மனைவி முன்பு மனு எழுதிக் கொடுக்கும் போது,  ராதிகா ஒங்க பர்ஸ் காணாமல் போயிற்று என்கின்ற தகவலையும் சேர்த்து எழுதுங்கள் என்று கூற, உடனே அவரின் மனைவி, மறுபடியும் பர்ஸ தொலைச்சிட்டீங்களா…? என்று திட்டத் துவங்கும் இடத்தில் அப்பாவியான மனைவியைப் பார்த்து தியேட்டரே வெடித்துச் சிரிக்கிறது.

வாய் பேச முடியாத சிறுமியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பேசும் ஒற்றை வசனத்தில் ஒட்டு மொத்த திரைக்கதையும் ரிவர்ஸ் ஹியர் எடுப்பது திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் சிறப்பு.

‘அந்தாதுன், பட்லாபூர்’ போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.  படத்தின் துவக்க காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை காட்சிக்கு காட்சி திருப்பங்களால் நிறைந்திருக்கிறது திரைக்கதை. ஒரு காட்சியைக் கூட நம்மால் யூகிக்க முடியவில்லை. இது இப்படித்தான் போகப் போகிறது என்று நினைத்து எல்லாக் காட்சிகளிலும் நாம் ஏமாறுகிறோம். ஸ்ரீராம் ராகவன், படத்தின் எடிட்டர் பூஜா லதா சுர்தி மற்றும் அர்ஜிஸ் பிஸ்வாஸ் மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.  சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மிகச் சிறப்பான திரைக்கதை “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தின் திரைக்கதை என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். அந்தளவிற்கு திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. திரைக்கதையில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நுவான்ஸஸ் ஏராளம்.

உதாரணத்திற்கு படம் ஏன் கிறிஸ்துமஸ் தினத்தின் முன்னிரவு நாளில் நடைபெற வேண்டும் என்பதற்கான விடை, படத்தின் துவக்க காட்சியில் வரும் இரண்டு மிக்ஸி ஜார் காட்சிகள் இடையே இருக்கும் கவித்துவமான தொடர்பு, அதில் காட்டப்படும் மோதிரம் படத்தின் இறுதிவரை வேறு வேறு தருணங்களில் பயணிப்பது, விஜய் சேதுபதி வாங்கும் அந்த அர்த்தம் பொதிந்த கூண்டுப் பறவை பொம்மை, பிரடெரிக்கின் பர்ஸ் திரைக்கதையில் செய்யும் மாயம், வாய் பேச முடியாத சிறுமி பேசும் ஒற்றை வசனம்,  துரத்தி துரத்தி அடித்தாலும் மீண்டும் மீண்டும் வலிய வந்து பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் வார்ப்பு, கொலை களத்தின் நடுவே டாய்லெட்டின் வாஷ்-அவுட்டில் வைத்து காப்பாற்றப்படும் இரண்டு மீன்கள் என படத்தில் சிலாகிக்கும்படியான நுவான்ஸஸ் அதிகம்.

ப்ரீத்தமின் பாடல்களும் பி.ஜார்ஜின் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம். அதிலும் குறிப்பாக பி.ஜார்ஜின் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் திகிலையும் புதிரையும் மர்மத்தையும் பல மடங்க கூட்ட உறுதுணையாக இருந்து பணியாற்றி இருக்கிறது.  மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் பழைய பாம்பே அதே கம்பீரத்துடன் நம் கண் முன்னால் நிழலாடுகிறது.  ரெஸ்டாரண்டுகள், நகர வீதிகள், கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதியின் வீடு போன்றவை அதற்கே உரித்தான ஒளி அழகியலுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வசனங்களும் மிகத் தெளிவாக, முதலில் பார்க்கும் போது ஒரு அர்த்தத்தையும் இரண்டாவது முறை பார்க்கும் போது மற்றொரு அர்த்தத்தையும் கொடுக்கும்படி எழுதப்பட்டு இருக்கின்றன.  “மறந்ததும் தூக்கிப் போட்ருவேன், தூக்கிப் போட்டாத்தான மறக்க முடியும்…” ” எது பெரிய துயரம்னு சொல்லத் தெரியலை, ஆச ஆசையாய் செஞ்ச காதல் செத்துப் போறதா…? இல்ல ஆசை ஆசையா  காதலிச்சவுங்க செத்துப் போறதா..? யாராவது அழுகுற மாதிரி போட்டோ எடுத்து வீட்ல மாட்டிப் பாத்திருக்கியா..? என பல இடங்களில் வசனங்கள் பசுமரத்தாணியாக மனதில் பதிகிறது.

கொலையை பிரச்சனைக்கு தீர்வாக முன் வைப்பதற்கான சரியான காரணம் திரைக்கதையில் சொல்லப்படவே இல்லை., மேலும்  போலீஸ் விசாரணை மற்றும்  அரங்கேற்றப்பட்ட அந்த திட்டமிட்ட துர் சம்பவத்தின் நம்பகமின்மை அதில் இருக்கும் பல விடையில்லாக் கேள்விகள், குழப்பங்கள், தன் மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்ன என்பது தெளிவாக பார்வையாளர்களுக்குச் சொல்லப்படாதது, எந்த கதாபாத்திரத்தின் மீதும் ஆத்மார்த்தமான பிணைப்பு ஏற்படாதது போன்றவை படத்தின் பெரும் குறைகள்.

இருப்பினும் கதாபாத்திர வடிவமைப்பு, மர்மங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த திரைக்கதை, சிலாகிக்கும்படியான சிந்திக்கும்படியான காட்சிகள் மற்றும் வசனங்கள் போன்றவை “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தினை புறந்தள்ள முடியாத திரைப்படங்களாக முன்னிருத்துகின்றன.

”மெரி கிறிஸ்துமஸ்” –  ஆச்சரியமூட்டும் அன்பு பரிசு மட்டுமின்றி பாவத்தின் சம்பளமும் கூட.

மதிப்பெண் : 3.0 / 5.0

Related posts

Leave a Comment