கற்காலத்தின் காதல் கதையையும், கலியுகத்தில் டேமேஜ் ஆகிக் கிடக்கும் பேய் கதையையும் ஒன்றாக சேர்த்து பேக் செய்து டெலிவரி செய்தால் அதுதான் தூக்குதுரையின் கதை.
பணக்கார நாயகி, ஏழை நாயகன் காதல், கெளரவக் கொலை, பேயாக வந்து பழி வாங்குவது. இறுதியில் சுபமான முடிவு. இவ்வளவுதான்… இவ்வளவே தான் இந்த தூக்குதுரை.
யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், செண்ட்ராயன் , இனியா, மாரிமுத்து, மகேஷ், நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத், தங்கராஜு, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு என்று பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் நடிகர் நடிகைகள் பட்டாளத்தில் காமெடி நடிகர்களே அரை டஜன் கணக்கில் இருந்தாலும், படத்தில் காமெடி கிலோ என்ன விலை என்று நம்மை கேட்கிறார்கள்.
யோகிபாபு படத்தில் இருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. இனியா அப்படியே. எப்பேர்ப்பட்ட நடிகை. இந்தப் படத்திற்கும் இந்தக் கதாபாத்திரத்திற்கும் இவ்வளவே அதிகம் என்று நினைத்துவிட்டாரா..? என்று தெரியவில்லை.
மொட்டை ராஜேந்திரன் தலையில் எப்படியாவது முடி வளர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அப்படி வளர்ந்தால், நான் மொட்டையடிக்கிறேன் என்று விரதம் தொடங்கிவிடலாம் என்று நினைக்கிறேன்… அப்படியாவது அவர் இந்த மொட்டைத் தலை காமெடியை நிறுத்தினார் என்றால், தமிழன் தலை தப்பிக்கும்.
பாலசரவணன் இன்னும் எவ்வளவு காலம் தான் ஃபார்வர்டு மெசெஜ் காமெடிகளை வைத்து காலம் தள்ளுவாரோ தெரியவில்லை. பாலசரவணன், மகேஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் அண்ட் கோ காமெடி என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளுக்கு நாம் தியேட்டரில் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறோம்.
அந்த இழவெடுத்த கிரீடத்தை எவன் கையிலாவது கொடுத்துவிடுங்களேன் என்று கூவாத குறை தான். எவ்வளவு கத்தியும் ஈவு இரக்கமில்லாமல் அடிக்கிறார்கள். இன்னும் அடித்தால் தாங்கமாட்டார்கள் என்று மனமிரங்கி படத்தை முடிக்கிறார்கள்.
இது காமெடிப்படமா..? இல்லை த்ரில்லர் படமா..? என்பது இயக்குநருக்காவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்…
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கிறார். ஓப்பன் கேட் புரொடெக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. கே.எஸ்.மனோஜ் இசையமைக்க, ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தூக்குதுரை – துக்கம்
மதிப்பெண் : 2.0 / 5.0