சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

 

தன் சிறுவயதிலேயே தான் ஒரு ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆக வேண்டும் என்கின்ற ஆசையை தனக்குள் வைத்துக் கொண்டு வளரும் ஒரு சிறுவன், தன் லட்சியத்தை அடைய எவ்வளவு  தடைகளையும்  சிக்கல்களையும் கடக்கிறான் என்பதே “சிங்கப்பூர் சலூன்”

சிறுவயதில் ஒரு மனிதனின் ஒட்டு மொத்த தோற்றத்தையும் ஒரு சிகை அலங்கார நிபுணர் நினைத்தால் மாற்றி அந்த மனிதனுக்கான அந்தஸ்தத்தை  சமூகத்தில் உயர்த்திவிட முடியும் என்பதை கண்கூடாக காணும் சிறுவன், அந்த சிகை அலங்கார நிபுணர் “சாச்சா”வாக வரும் லால் மீதும் அவர் செய்யும் தொழில் மீதும் மிகுந்த நேசம் கொண்டு, அந்தத் தொழிலை கற்றுக் கொள்ள முனைகிறான். அதைக் கற்றுக் கொள்ளும் புள்ளியில் அந்த தொழில் மீது காதல் கொண்டு, படித்த வேலைக்குப் போவதை விட பிடித்த வேலையை செய்வதே மேல் என்று முடிவு செய்கிறான். சிறுபிராயத்தில் எடுத்த அந்த முடிவு அவனது இளம் பிராயத்தில்  என்ன மாதிரியான எதிர்வினைகளைக் கொடுத்தது…? வலிகளைக் கொடுத்தது…? என்பதை திரைக்கதை விளக்கிறது.

சிறுவயது ஆர்.ஜே.பாலாஜியும் அவரது முஸ்லீம் நண்பனும் அறிமுகம் ஆகும் காட்சிகளும், அவர்கள் இருவருக்கும் “சாச்சா” என்னும் சிகை அலங்கார நிபுணர் அறிமுகமாகும் காட்சியும் ரசனையுடன் படமாக்கப்பட்டு  இருக்கிறது.  இந்து முஸ்லீம் சிறுவர்களைக் காட்டி, அவர்களின் மூலமாக அவர்களின் வாழ்க்கையையும், வாழ்வியலையும் காட்டியதோடு, அதோடு இணைந்து கதாபாத்திர அறிமுகத்தையும் நடத்தியது சிறப்பானது. குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இரு பிராயத்து சிறுவர்களும் சிறப்பான நடிப்பை நல்கி இருக்கின்றனர்.

சிறுவர்களது பார்வையில் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்க முடிவு செய்து, அவர்கள் சாச்சாவை பாலோ செய்வதும், பின்னர் அவர் தொழிலினால் ஏற்படும் அதிசய மாற்றங்களின் சாட்சியாக மாறி அவர்  மீதும் அவர் தொழில் மீதும் ப்ரியம் கொள்ளும் தருணங்கள் கவித்துவமானது.

இளைஞனாகப் பிறகு தன் லட்சியத்தை நோக்கி நகரும் தருணங்களில் சற்று தொய்வு தெரிகிறது. மீண்டும் திருமண எபிசோடுகள் துவங்கும் போதிலிருந்து, குறிப்பாக சத்யராஜ் கதாபாத்திரம் அறிமுகமானப் பின்னர் திரைப்படத்தில் கலகலப்பு இன்னும் கூடி விடுகிறது.

கஞ்சத்தனமான மாமனார் கதாபாத்திரம்  நீண்ட நாட்களுக்குப் பின்னர் சத்யராஜ்-க்கு சரியான தீனி கொடுத்திருக்கிறது. “இன்னும் நாலு மாசமோ அஞ்சு மாசமோ..” என்கின்ற டயலாக்கோடு அறிமுகமாகும் சத்யராஜ், அடுத்தடுத்து செய்யும் அலப்பறைகளில் திரையரங்கமே வெடித்துச் சிதறுகிறது.

ஊர்ப்புறங்களில் இருக்கும் கஞ்சத்தனமான அப்பன் கதாபாத்திரத்தை  வேஷ்டி, சட்டையும், நெற்றியில் நீளப் பட்டையும் அப்பிக் கொண்டு, அப்படியே நம் கண் முன் நிறுத்தி அசரடிக்கிறார் சத்யராஜ்.  அதற்கு மறுரூபமாக பாரில் ஓஸி பீர்க் குடிக்கச் செல்லும் போது, ஜீன்ஸ் டீ-சர்ட் சகிதமாக ஸ்டைலாக நடந்து கொண்டு அவர் Bar-க்குள் வரும் காட்சியில் இளமைகால சத்யராஜை நினைவுப்படுத்துகிறார்.

ஒட்டுமொத்தமாக அந்த பார் சீக்குவன்ஸ் காட்சி ஆரம்பத்தில்  இருந்து இறுதி வரை ஆடியன்ஸுக்கு  கலகலப்புக்கும்  காமெடிக்கும் பஞ்சமில்லாமல் நகர்கிறது.

இரண்டாம் பாதியில்  புதியதாக கடை திறக்கப் போகும் நிமிடங்கள் நெருங்க நெருங்க கதை போக்கிடம் தெரியாமல் திண்டாடத் துவங்குகிறது.  நாயகன் தன் இலட்சியத்தை அடையவிடாமல் தடுக்க ஏதேனும் சிக்கல் வர வேண்டுமே..>? எதை சிக்கலாகக் கொண்டு வருவது என்று தெரியாமல், ஜான் விஜய் கதாபாத்திரத்தை கொண்டு வரலாமா…? என்று நகர்ந்து, பின்னர் அது பல படங்களில் பார்த்த மிகமிக சராசரியான சிக்கலாக இருக்கும் என்பதை உணர்ந்து பின்வாங்கி, வேறு எதை பிரச்சனையாக்குவது என்பது தெரியாமல் குழம்பி, இறுதியாக இயற்கையை எதிரியாகக் கொண்டு முன் நிறுத்தி இருக்கிறார்.

ஆனால் அது படத்தோடு ஒட்டவே இல்லை என்பதே உண்மை. சைவ உணவு சாப்பிடுவன் தட்டில் ஃபீப் கறி இருப்பது போலவும், ஃபீப் பிரியாணி சாப்பிடச் சென்றவன் தட்டில் கோஃபி ஃப்ரை இருப்பது போலவும் ஆகிவிட்டது.

திருவண்ணாமலையில் இருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு எண்ட்ரி கொடுக்கும் அரவிந்த்சாமி, சதுப்புநிலப்பகுதி, தவிக்கும் கிளிகள்,  நகர்மயமாக்கலின் ஒரு பகுதியாக இடம்பெயரச் செய்யப்பட்டு வரும் குடிசைவாசிகள்,  டான்ஸ் போட்டி, கடன்காரர் தொல்லை என்று கதை இஷ்டத்திற்கு எங்கெங்கே பயணிக்கிறது.  கடைசியில் சம்பந்தமே இல்லாமல் ஸ்டாலின் கையெழுத்திட்டு படத்தை முடித்து வைக்கிறார்.

நடிப்பாக பார்த்தால் அதிகமாக ஸ்கோர் செய்வது சத்யராஜ் தான்.  தன் அடாவடியும்  நக்கலும் கலந்த நடிப்பால் கலகலக்க வைக்கிறார். அவருக்கு அடுத்ததாக இரண்டு சிறு பிராயத்தில் நடித்த சிறுவர்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.  ஆர்.ஜே.பாலாஜி படம், காமெடி இருக்கும் என்று நம்பி வந்தால், கனவைத் துரத்தும் கதாபாத்திரம் என்பதாலோ என்னவோ  எல்லா நேரமும் ஆர்.ஜே முறைத்த முகத்துடன் அலைகிறார். அவரின் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ரோபோ சங்கர்.  ஃபார் காமெடி காட்சிகளில் அவர் அடிக்கும் டைமிங் ரைமிங் ஒன்லைனர்களுக்கு தியேட்டரே அதிர்ந்து சிரிக்கிறது.

தகப்பனாக வரும்  தலைவாசல் விஜய் “ஒங்கப்பா சொன்னாலும் சரியாத் தான் இருக்கும்” என்று சொல்லும் போதும்,  கோபத்துல நீ நல்லா சாப்டுறடா என்று சொல்லும் காட்சிகளிலும் ஸ்கோர் பண்ணுகிறார்.  ஆர்.ஜே.பாலாஜியின் நண்பராக வரும் கிஷான் தாஸ் சிறப்பான நடிப்பை நல்கி இருக்கிறார்.  மீனாட்சி சவுத்ரி  காதலியாக வந்து பாதிக்கு மேல் காணாமல் போகிறார்.  மனைவியாக வரும் ஆன் சித்தல் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நடிகர் ஜீவாவும் ஆளுக்கொரு காட்சியில் வந்து போகிறார்கள்.  மற்றொரு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வரும் ஜான் விஜய் நிறைவான நடிப்பைக்  கொடுத்திருக்கிறார். விவேக் சிவா மற்றும் மெர்லின் சாலமோன் இசையமைத்திருக்கிறார்கள்.  இசையோ பின்னணி இசையோ நிறைவாக இல்லை. சுகுமாரின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. சி.ஜி காட்சிகள் தான் அடிப்படையான தரத்துடன் இருந்து, இவை எல்லாம் சி.ஜி.காட்சிகள் என்பதை இடித்துரைத்துக் கொண்டே இருக்கின்றன.

வேல்ஸ் ப்லிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.  ‘ரெளத்ரம்’  “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “ஜுங்கா” படங்களை இயக்கிய கோகுல் இயக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் “சிங்கப்பூர் சலூன்” கலகலப்பான முதல்பாதியையும், காணாமல் போன குழந்தையின் திசை தெரியாத பயணம் போன்ற இரண்டாம் பாதியையும் கொண்டிருக்கிறது.

“சிங்கப்பூர் சலூன்” – சிறப்பாக ஒன்றும் இல்லை.

மதிப்பெண் – 2.5 / 5.0

 

 

Related posts

Leave a Comment