ப்ளூ ஸ்டார் – விமர்சனம்

ஒரு விளையாட்டுத் தொடர்பான திரைப்படத்தில் என்னெல்லாம் இருக்க வேண்டும்.  ஒரு தோல்வி, அந்த தோல்வியால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடும் தேடல்,  விளையாட்டிற்குள் அரசியல், பாகுபாடு, வீரர்களுக்குள் முரண்பாடு,  சிறிய சறுக்கல், ஒரு பெரிய போட்டி, அந்தப் போட்டியில் வெற்றி, இவைகளுக்கு நடுவே தேவைப்பட்டால் சிற்சில காமெடிகள், காதல் காட்சிகள் இவைகளெல்லாம் இருக்கும் தானே. “வெண்ணிலா கபடிக் குழு” துவங்கி ‘பிகில்’ வரை  விளையாட்டு தொடர்பான எல்லாப் படங்களும் இந்த டெம்ப்ளெட்டில் தான் அமைக்கப்படும். அதில் இருந்து சற்றும் சறுக்காமல் அமைக்கப்பட்டு இருக்கிறது “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் திரைக்கதை.  எக்ஸ்டிரா-வாக வர்க்கம் அரசியலுடன் சற்று சாதிய அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது திரைக்கதை.

அரக்கோணத்தில் நடக்கும் கதை. அவ்வூரின் காலனிப் பையன்களுக்கும், ஊர்க்காரப் பையன்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் நெடுநாளைய பகை இருக்கிறது.  ஒரு சின்ன சீண்டலில் தங்களுக்குள் இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு இருதரப்பும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது.  அதற்காக நடக்கும் கிரிக்கெட் போட்டியின் மூலம், ஊர்க்கார பசங்களின் அணிக்கு கேப்டனாக இருக்கும் ராஜேஷ் (சாந்தனு)-க்கு மனதில் சிறிய மாற்றம் நிகழ்கிறது.  வர்க்க அரசியலை ராஜேஷ் புரிந்து கொள்ளும் புள்ளியில், அந்த வர்க்க அரசியலை எதிர்க்க, காலனி பசங்களின் கேப்டனாக இருக்கும் ரஞ்சித் (அசோக் செல்வன்) உடன்  கைகோர்க்க வேண்டிய நிர்பந்தம். அவர்கள் சேர்ந்தார்களா..? வர்க்க அரசியலை எதிர்த்து வென்றார்களா..? என்பது மீதிக்கதை.

ரஞ்சித் கதாபத்திரத்தில் அசோக் செல்வன். அரக்கோணம் பையனாகவே மாறி இருக்கிறார்.  இம்மானுவேல் ஆக வரும் பகவதி பெருமாளுக்கு நேர்ந்த கொடூரத்தின் நேரடி சாட்சியாக நிற்கும் அசோக் செல்வன் , அதிலிருந்து கிரிக்கெட் மீதான காதலையும்,  ஊர்க்கார கிரிக்கெட் அணி மீதான வெறுப்பையும் ஒருங்கே வளர்த்தெடுக்கிறார்.  இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கின்ற கனவெல்லாம் இல்லாமல் ஒரே ஒரு போட்டியில் ஊர்க்கார அணியை வீழ்த்த வேண்டும் என்பதை தன் வாழ்நாள் லட்சியமாக தன் காதலியிடம் பகிரும் போது, அவர் கண்ணில் மின்னும் கனவு அபாரமானது.  தன் தந்தைக்காக கிரிக்கெட் செலக்‌ஷனுக்குச் சென்று அங்கு அவமானத்திற்கு உள்ளாகி ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளில் கண்ணீர் சிந்த அமர்ந்திருக்கும் அந்த தருணங்களில் உள்ளத்தை தொடுகிறார்.  கடைசியாக காதலியை காணச் செல்லும்  காட்சியில் கண்களில் தேங்கி நிற்கும் சோகமானது, ஒரு காதல் கவிதை வடிக்கிறது.   தம்பியின் மீதான கண்டிப்புடன் கூடிய அன்பிலும்,  காதலியின் மீதான அக்கறையுடன் கூடிய அன்பிலும்,  அணிக்காக விட்டுக்கொடுக்கும் பண்பிலும் உயர்ந்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார்.

ராஜேஷ் ஆக வரும் சாந்தனுவிற்கு வாழ்நாள் முழுக்க சொல்லிக் கொள்ளும்படியான திரைப்படம். ஊர்க்கார கிரிக்கெட் அணியின் கேப்டனாக முறைப்புடன் விரைப்புடன் சுற்றித் திரிந்து, வட்டிக்கு கடன் வாங்கிய வயது வந்த ஆட்களையும் அதிகாரத் திமிறுடன் அழைத்து, ஆணவத்தை தன் அன்றாடங்களில் காட்டும் கதாபாத்திரத்தை அநாயசமாக செய்திருக்கிறார். காலனி அணியை கிரிக்கெட்டில் வீழ்த்த வேண்டும் என்னும் எண்ணத்தில் அவர் எடுக்கும் முன்னகர்வுகள், ஒரு கட்டத்தில் வர்க்க அரசியலையும், அந்த வர்க்க அரசியல் தான் ஒருவனை கீழாக நினைப்பது போல், தன்னை அது கீழாக நினைக்கிறது என்கின்ற உண்மையை உணரும் தருணத்தில் சாந்தனுவின் உடல்மொழி சபாஷ்.

படத்தின் ஒட்டுமொத்த ஆச்சரியமும் சாம் கேரக்டரில் வரும் ப்ருத்வி பாண்டியராஜன் தான்…  தன் அண்ணனாக வரும் அசோக்செல்வனிடம் ஏற்பட்ட முரண்பாட்டில் முக்கியமான கிரிக்கெட் போட்டிக்கு ஆடப் போகாமல் குடித்துவிட்டு போதையில் சலம்புவதும், அண்ணனுடன் முட்டி மோதுவதும்,  என்ன சொல்கிறோமோ அதைச் செய்யாமல் அதற்கு எதிராக செயல்படுவதும்,  நீ நவம்பரில் பூத்த டிசம்பர் பூ என்று காதலியிடம் கவிதை படிப்பதுமாக அசத்தலான கதாபாத்திர வார்ப்பு. அந்த கதாபாத்திரம் தான் ஒட்டுமொத்த படத்தில் கலகலப்பிற்கு காரணமாக இருக்கிறது.

ஆனந்தியாக வரும் கீர்த்தி பாண்டியன் அரக்கோணத்தின் பாஷையை குழைவுடன் பேசி நம்மை குதூகலிக்கச் செய்கிறார்.  “எனக்கு இந்தக் கொலுசு, நகையெல்லாம் பெருசா புடிக்காதுடா… என்னை ஒரே ஒரு தடவை க்ரவுண்ட்ல பேட்டிங் பண்ண வைக்கிறீயா..?”  என்று கேட்கும் நொடிகளில் பல்வேறு ஆசைகளை உள்ளத்திற்குள்  போட்டு பூட்டி வைத்துக் கொண்டு அலைபாயும்  மனதுடன் அன்றாடங்களில்  தொலைந்து போகும் அத்தனை பெண்களையும் நம் கண் முன் நிறுத்தி கலங்கடிக்கிறார்.  கடைசி காட்சியில் வீட்டின் முற்றத்தில் நின்றபடி காதலனைப் பார்க்கும் அவரது கலங்கிய கண்களின் வழியே அந்த காதலும் கரைந்து ஓடுவதைப் பார்க்க முடிகிறது.  தேர்ந்த கதைகளையும், தேர்ந்த கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கும் முதிர்ச்சியில் கீர்த்தி பாண்டியன் தொடர்ச்சியாக நம்மை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வாழ்த்துக்கள்.

இம்மானுவேல் ஆக வரும் பகவதி பெருமாள் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் எனப் பெயர் எடுத்து தன் காலனி ஆட்களிடம்  ஒரு முன்னுதாரணமாக திகழும் மனிதர்.  அவருக்கு நிகழும் துயர சம்பவத்திற்குப் பிறகு வெறுப்பை சுமந்து கொண்டு வெறுப்பின் உறைவிடமாக மாறாமல்,  அன்புக்கான வழியாக மாறி அந்த வழியில் ஒட்டுமொத்த ஊரையும் இழுத்துப் போக நினைக்கும்  செயலை செவ்வனே செய்திருக்கிறார். “வெறுப்பு அழிவுக்கு இட்டுச் செல்லும்; அன்பு ஒன்றுதான் ஆத்மார்த்தமான பாதை” என்பதை அறிவுறுத்தும் இம்மானுவேல் கதாபாத்திரம் பக்ஸ் என்னும் பகவதி பெருமாளின்  திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்.

இயேசப்பாவின் இன்னல்களையும் கர்த்தரின் காத்திரமான வசனங்களையும் ஆங்காங்கே  உதிர்த்தபடி,  கிரிக்கெட் மட்டையும் கையுமாக அலையும்  தன் இரு பிள்ளைகளையும் ஆண்டவரைக் காட்டி பயமுறுத்த முனையும் அற்புதமான அம்மாவாக லிசி கலக்கியிருக்கிறார்.  அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல் “கிரிக்கெட் நன்றாக விளையாடினால் சோறு போடும்” என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், தன் பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கிரிக்கெட் கோச்சாக வருபவர்,  கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள் என துணை கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றார்கள்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் இருபாடல்களும் அருமை. அதிலும் அறிவு எழுதிய “ரயிலைத் தள்ளும் மேகமே” பாடல்  காதலிக்கும் உள்ளங்களை கண்டிப்பாக கொள்ளை கொள்ளும். பின்னணி இசை காட்சிகளோடு நம்மை லயித்து மெய்மறக்கச் செய்கிறது.  ஓளிப்பதிவாளர் தமிழ் அ.அழகன் ஒளிக் கீற்றுகளை அற்புதமாக கையாண்டிருக்கிறார்.  சூரியனின் பின் ஒளியில் ரயிலடி தண்டவாளங்களிலும், ரயில்வே ஸ்டேசன்களிலுமான காட்சிகள் கண்களை கொள்ளையடிக்கின்றன.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.  விளையாட்டு தொடர்பான கதைக்களத்தின் வளமையான பாதையிலேயே திரைக்கதை பயணிப்பதால், நாம் எதிர்பார்க்கின்ற நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலவே நடக்கிறது. இப்படி கதை மற்றும் திரைக்கதையாக வித்தியாசம் காட்டாவிட்டாலும், கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையேயான ரசனையான காட்சிகளை திரைக்கதையில் அமைத்ததன் மூலம் இயக்குநர் கவனம் ஈர்க்கிறார்.  இதே காரணத்தினால் படம் பார்க்கும் நம் காட்சி அனுபவமும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

ப்ளூ ஸ்டார் –  மின்னி மறையும் நட்சத்திரம்.

மதிப்பெண் 3.0 / 5.0

 

Related posts

Leave a Comment