“சின்ன மக்கள் திலகம்” ; ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இயக்குநர் ஆர்.வி உதயகுமார் புகழாரம்

நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்

தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நாயகன் லியோ சிவகுமார் பேசும்போது, “இந்த படத்தின் டீசர் வெளியீடு தி.நகரில் நடந்தபோது ராமராஜன் சாரை பார்க்க வேண்டும் என்பதற்காக என்னுடைய நண்பருடன் அங்கே சென்றேன். அப்போது என்னை கவனித்த தயாரிப்பாளர் மதியழகன், சில நாட்கள் கழித்து என்னை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறி அழைத்து நடிக்க வைத்தார். சிறுவயது காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் கேட்டு வளர்ந்த எனக்கு இன்று அவர் எனது முகத்தைப் பார்த்து ஒரு பாடல் போடுகிறார் என நினைக்கும் போது மிகப் பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.

நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது, “ராமராஜனின் ‘சோலை புஷ்பங்கள்’ படத்தில் நான் டப்பிங் பேசிய காலத்தில் இருந்து இன்று இந்த படத்தில் இணைந்து நடித்ததுவரை எல்லாரிடமும் ஒரே போல பழகக் கூடியவர் ராமராஜன். எனக்கு ஒரு சின்ன ஆசை. அது நிறைவேறும். நிறைவேறனும்.. இப்போது இங்கே இருக்கக்கூடிய மக்கள் திரள் இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவிலும் இருக்க வேண்டும். கரகாட்டக்காரன் படம் போல அதையும் மீறி இந்த படம் ஓட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ராமராஜன் மறுபடியும் இடைவெளி இல்லாமல் நடிக்க வேண்டும். மக்கள் நாயகன் என்கிற பட்டம் அவருக்கு மட்டும் தான்.. அதை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, “நடிகர் ராமராஜனின் மனம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று இயல்பான ஒரு நடிகர். ராமராஜனை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நான் படம் இயக்கிய சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விநியோகஸ்தராக ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தை வாங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. அப்போது ராம நாராயணன் என்னிடம் அதற்கு பதிலாக ராமராஜன் படம் ஒன்றை தருகிறேன், அதை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறினார். ரஜினி படத்திற்கு பதிலாக ராமராஜன் படத்தை ரிலீஸ் செய்வதா என்கிற யோசனைல் ஏற்பட்டது. அதனால் அதை என்னால் வாங்க முடியவில்லை. அந்த படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரை அந்த படம் வசூலித்தது. ஆனால் ரஜினி படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் எனக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது. ராமராஜன் மனது பூவை விட மென்மையானது. உண்மையிலேயே இவர்தான் சின்ன மக்கள் திலகம். தான் நேசித்தவர்களை எல்லாம் தயாரிப்பாளர்களாக மாற்ற முயற்சித்து அதில் வெற்றி பெற்றவர் ராமராஜன்” என்று பேசினார்

Related posts

Leave a Comment