DeAr விமர்சனம்

மேலோட்டமாக படத்தின் ட்ரைலரை மட்டும் வைத்துப் பார்த்தால் குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல் தான் இத்திரைப்படம் என்று தோன்றும். ஆனால் திரைப்படம் அதையும் தாண்டி குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருக்கும் ஆண்களின் பல்வேறுபட்ட குறைபாடுகளையும் ஓரளவிற்குப் பேசி இருக்கிறது.

தீபீகாவான ஐஸ்வர்யா ராஜேஸுக்கு சிறுவயதில் இருந்தே குறட்டை விடும் பிரச்சனை இருந்து வருகிறது. இதை வெளிப்படையாக அவர் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தெரிவிக்க, அவரின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தன் குறையை மறைத்து, பெண் பார்க்க வந்த அர்ஜூனாகிய ஜி.வியை மணமுடிக்கிறார். முதலிரவன்றே ஐஸ்வர்யாவின் குறட்டைப் பிரச்சனை வெளியே தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளுமே DeAr திரைப்படம்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் நடிகைகள் தேர்வு தான். ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி.பிரகாஷ், ஜி.வியின் அண்ணனாக காளி வெங்கட், அண்ணியாக நந்தினி, அம்மாவாக ரோகிணி, ஐஸ்வர்யாவின் அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக இளவரசு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கை தேர்ந்த நடிகளை தேர்வு செய்திருப்பதால், அவர்களின் நடிப்பில் சாதாரண காட்சிகள் கூட பசை போட்டு மனதில் ஒட்டிக் கொள்கின்றன.

ஜி.வி.பிரகாஷுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லிக் கொள்வது போல் ஒரு திரைப்படம். முந்தைய படங்களை விட மேம்பட்ட ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். முகத்தில் காதல், அன்பு, இயலாமை, வெறுப்பு, அவமானம், கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தன்னுடைய நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார்.

நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிப்புக்கு தீனி போடுவது போன்ற கதாபாத்திரம். முதலிரவு அறைக்குள் அவர் முழித்திருக்க எடுக்கும் பிரயத்தனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. தன் குறையைச் சொல்லி என்னை வெறுத்துவிட மாட்டியே என்று கண்கலங்கும் போதும், தன் குறையினால் நேர்ந்த ஈடு செய்ய முடியாத இழப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், ஜி.வியை கட்டியணைத்து சமாதானம் செய்ய முயலும் இடத்தில் நம்மையும் கண்கலங்கச் செய்கிறார்.

கண்டிப்பான அண்ணனாக வீட்டின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தன் பிடியில் வைத்திருக்கும் சரவணன் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் கலக்கி இருக்கிறார். தன் மனைவியை வேலை வாங்கும் விதத்திலும், நடத்தும் விதத்திலும் ஆணாதிக்கம் கொண்ட அத்தனை கணவன்மார்களையும் கண் முன் நிறுத்துகிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் இளவரசுவின் கதாபாத்திரம் மிகுந்த நுட்பம் வாய்ந்தது. ஒட்டு மொத்த படத்திலேயே முன் உதாரணமாக திகழும் ஒற்றை ஆண் கதாபாத்திரம் அவர் தான். மனைவி சொல்லும் எடுபிடி வேலைகளை சலிக்காமல் செய்து கொண்டே, மகள் எடுக்கும் அத்தனை முடிவுகளையும் உடனிருந்து ஆதரிப்பதோடு மட்டுமின்றி, முக்கியமான தருணங்களில் கூட முடிவெடுக்கும் உரிமையை மகளிடம் ஒப்படைக்கும் பக்குவம் நிறைந்த அப்பாவாக நெஞ்சை நிறைக்கிறார் இளவரசு.

நாயகியின் அம்மாவாக வரும் கீதா கைலாசம் மகள் மீதிருக்கும் அன்பையும் கரிசனத்தையும் கோபமாகவும், கணவன் மீதான உரிமையை அதிகாரமாகவும் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி இரண்டாம் பாதியின் மொத்தக் கதையையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். குறட்டை பிரச்சனையை மேற்கொண்டு எப்படி வளர்த்தெடுப்பது என்பது தெரியாமல் திசையற்று திரியும் திரைக்கதையை பிடித்திழுத்து பெண்களுக்கு எதிரான ஆண்களின் அத்துமீறலாக அதை மடைமாற்றம் செய்யும் மாயாஜாலத்தை தன் தேர்ந்த நடிப்பால் சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

காளி வெங்கட்டின் மனைவியாக வரும் நந்தினி இதற்கு முன்னர் வேறெதும் படங்களில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை, இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். தன் கனவுகளை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டே கணவனுக்கு காலை முதல் மாலை வரை பணிவிடை செய்யும் குடும்ப்ப் பெண்களின் மாதிரியாய் திரையில் நிற்பதோடு நம் மனதிலும் நிற்கிறார்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் கேமரா குன்னூருக்கும் சென்னைக்குமான வித்தியாசத்தை லென்சுகளின் வழியே கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒரு மிடில் கிளாஸ் வீட்டின் கனகச்சிதமான செட்டப்பை கலை இயக்குநரின் நேர்த்தியான கை வண்ணத்தில் காண முடிகிறது.

இசை அசுரன் ஜி.வியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்து உதவியிருக்கின்றது. காட்சிகளுக்கான உணர்வுகளை மக்களின் மனதிற்குள் கடத்தும் மாயப்பாலமாக ஜி.வியின் இசையும் பாடலும் இப்படத்தில் இருந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் மிகச் சிறந்த கலைஞர்களை கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்த இடத்திலேயே பாதிக்கு மேல் ஜெயித்துவிட்டார். பட்த்தின் தலைப்பை கதையோடு இணைத்த விதமும், பட்த்தின் துவக்கத்திலேயே கதையை துவங்கியிருப்பதும் சிறப்பு. குறட்டைக்கு எதிர்வினையாக ஜி.வியின் வேலையை நிர்மாணித்து, அதன் மூலம் பிரச்சனை கிளம்புவதற்கான சுவாரஸ்ய முடிச்சுகளை ஏற்படுத்தியது திரைக்கதையை பலப்படுத்தி இருக்கிறது.

குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வது தான் படத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையாக ஒருபாதி வரைக்கும் இருக்கிறது. இரண்டாம் பாதியில் மேற்கொண்டு கதையை எப்படி வளர்த்தெடுப்பது என்று தெரியாமல் திரைக்கதை கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பிற்குள் பெண்கள் ஆண்களால் எப்படி கஷ்டப்படுத்தப்படுகிறார்கள் என்பதான சித்தாந்தங்களுக்குள் சென்று நம்மைக் குழப்புகிறது. பிறகு ஒரு வழியாக ரோகிணியின் கதாபாத்திரத்தின் வழியே முன்கதைக்கும் பின்கதைக்கும் நியாயம் சேர்த்து படத்தை சிறப்பாக முடித்து வைக்கிறார்கள். தலைவாசல் விஜயின் கதாபாத்திர வடிவமைப்பையும், அவரைக் கொண்டு க்ளைமாக்ஸில் நிகழ்த்தும் காட்சிகளையும் முழுதுமாக ஏற்க இயலவில்லை. மேலும் குழந்தையை அழித்த குற்றவுணர்ச்சியை நாயகன் நாயகி என இருவரிடமும் துளியும் காணாமல் இருப்பது இன்றைய நடைமுறையாக இருந்தாலும் நெருடலளிக்கிறது. சொல்லி வைத்தாற் போல் இரண்டு மகன்களும் மனம் மாறும் தருணங்கள் கொஞ்சம் செயற்கைசாயம் பூசிக் கொள்கின்றன. அந்த க்ளைமாக்ஸ் காட்சி பழக்கப்பட்டது தான் என்றாலும் உணர்வுகளோடு கனெக்ட் ஆவதால் ஈர்க்கிறது.

மொத்தத்தில் கதை துவங்கும் போதே முடிவு இதுதான் என்று தெரிந்தாலும் கூட, அந்த முடிவை நோக்கிய பயணம் காட்சிகளினாலும் ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் சிறப்பான நடிப்பினாலும் காண்பனுபவத்தை சிறப்பாக்கி இருக்கிறது.

DeAr – அன்பு போதனை

மதிப்பெண் – 2.75 / 5.0

 

Related posts

Leave a Comment