கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…?
ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு செல்வதில் வந்து நிற்கிறது. இப்பொழுது 30 வருடங்களை அநாயசமாகக் கடந்தால் நீட் தேர்வு எழுத திருத்தணியில் இருந்து வேலூர் வந்த ப்ரியா பவானி சங்கரை ஒரு கூட்டம் கொலை செய்ய துரத்த, எம்.எல்.ஏ சமுத்திரக்கனிக்கு எல்லாமும் ஆக இருக்கும் விஷால், சொல்லில் அடங்காத ஒரு பிரியத்தால் ப்ரியா முன் சென்று அரணாக நிற்கிறார். இந்த பாராவில் சொல்லப்பட்ட அத்தனைக் கதைக்குமான ஒட்டு மொத்த தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக விளக்கும் பாணியில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆறடி ஐந்து அங்குலத்தில் விஷால் அட்டகாசமாக ஆக்ஷன் காட்சிகளுக்குப் பொருந்திப் போகிறார். ஆக்ஷன் என்பது அவருக்கே அளவு எடுத்து தைத்த சட்டை போல் அத்தனை அழகாக அவருக்குப் பொருந்திப் போகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க சண்டை போட்டிருக்கும் விஷால், ப்ரியா பவானி சங்கர் வரும் காட்சிகளில் எல்லாம் ப்ரியத்துடன் உருகிப் போய் நடக்கும் சண்டைக்கும் எனக்கும் தொடர்பில்லா பிள்ளை போல் நிற்கிறார். ஆனால் ப்ரியாவிற்கு பிரச்சனை வந்ததும் சீறிக் கொண்டு அறுபதடி அய்யனாராக எழுந்து நிற்கிறார். தன் தாயை நினைத்து உருகும் இடங்களில் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
யார் பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அழகுச் சிலையாக ப்ரியா பவானி சங்கர் வருகிறார். ஆனால் நாயகன் ஏன் அவரை வைத்த கண் வாங்காமல் அப்படி பார்க்கிறார் என்பதற்கு வேறொரு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. விஷாலை பொறுக்கியாக எண்ணி, பின்னர் பொறுப்பான பொறுக்கி என்று புரிந்து கொண்டு சிலிர்க்கும் போதும், இவன் ஏன் தன்னைப் பாதுகாக்க உயிரையும் கொடுக்கத் துணிகிறான் என்று குழம்பும் போதும், அவன் தன்னை எப்படி பார்க்கிறான் என்று தெரியும் போது, கூனிக் குறுகிப் போய் அவனை வீட்டிற்கு அழைக்கும் காட்சியிலும் நடிப்பால் நம்மை மிரட்டுகிறார்.
வேலூர் எம்.எல்.ஏ பன்னீராக வரும் சமுத்திரக்கனி அரசியல்வாதி பாதி அடியாள் மீதி என்பதான வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார். விஷாலை கைது செய்ய ஆந்திர போலீஸ் எண்ட்ரி கொடுக்கும் இடத்தில் வந்து நிற்கும் சமுத்திரக்கனியின் எண்ட்ரியும் அங்கு அவர் ஆந்திரப் போலீஸுக்கு கொடுக்கும் ஆப்பும் அமர்களம். மாமனாக இருந்து விஷால் கலங்கும் இடங்களில் எல்லாம் அவரை தோள் தட்டித் தூக்கும் கதாபாத்திரத்தில் உயர்ந்து நிற்கிறார்.
காமெடி கலந்த ரவுடி கதாபாத்திரத்தில் யோகி பாபு பிரமாதப்படுத்தி இருக்கிறார். அவரின் குடி தொடர்பான ஒன்லைனர்களை சிந்திக்கவும் பிற ஒன்லைனர்கள் சிரிக்கவும் வைத்திருக்கின்றது. ஓரிரு காட்சிகளில் வரும் மொட்டை ராஜேந்திரன் காட்சிகளை நிரப்பவே பயன்பட்டிருக்கிறார். அதே வகையறாவில் விடிவி கணேஷும் வந்து போகிறார்.
ஒரே காட்சியில் வந்தாலும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசி அங்கிருக்கும் ரவுடிகளை “..த்தா’” என்ற ஒற்றைக் குரலில் ஓங்கி அடக்கி அமர்களப்படுத்துகிறார் கெளதம் மேனன். ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், துளசி போன்றோர் கொடுத்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
வில்லன்களாக முரளி சர்மா, ஹரிஷ் பேரடி மற்றும் முத்துக்குமார் நடித்திருக்கிறார்கள். குண்டு குண்டாக வரும் ஆந்திர ரவுடிகளின் அரிவாள் வீச்சில் இருக்கும் மிரட்டலும் திகிலும் வில்லன்களாக வரும் இந்த மூவர் கூட்டணியின் பேச்சிலும் நடிப்பிலும் செயல்பாடுகளிலும் இல்லை என்பது ஒரு குறை. அவ்வளவு பெரிய ரவுடியாக இருக்கும் முரளி சர்மா விஷாலில் ஒற்றை மிரட்டலில் இவன் எங்கிருந்துடா வந்தான் என்கின்ற விதமாக வேர்த்து விதிர்விதிர்ப்பது வில்லனுக்கான அரிச்சுவடி இல்லை.
சுகுமார் ஒளிப்பதிவில் அனல் மட்டுமின்றி பல இடங்களில் கேமராவும் பறந்திருப்பதை உணர முடிகிறது. படத்திற்கு அநாயசமான உழைப்பை நல்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அது போல் தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான ஆக்ஷன் வெறியை அள்ளித் தெளித்திருக்கிறது.
இயக்குநர் ஹரி படங்களின் வழக்கப்படி நாயகன் வில்லனை அவனது இடத்திற்கே சென்று மிரட்டிவிட்டு வரும் இடம் இதிலும் உண்டு. ஆனாலும் அந்த சண்டைக் காட்சியின் வடிவமைப்பும், சண்டைக்கான சூழலும் சிறப்பாக இருப்பதால் அக்காட்சியை ரசிக்க முடிகிறது. அதுபோல் ஆரம்பத்தில் ப்ரியா பவானி சங்கரைக் காப்பாற்றும் சண்டைக் காட்சியிலும் காட்சியமைப்பு ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
மேலும் ஆந்திர வில்லன்கள், வில்லன் இருப்பிடத்திற்கே சென்று சவால் விடும் ஹீரோ, செண்டிமெண்ட் கருதி வைக்கப்படும் குடும்ப சீன்கள், பெண் என்பவள் புனிதமானவள் என்கின்ற பொத்தாம் பொதுவான கருத்து, கார் வேகத்திற்கு ஓடும் காட்சிகள், இரத்த களறியான காட்சிகள், இறுதிக் காட்சியில் தலைமறைவாகும் வில்லன் என இயக்குநர் ஹரி படங்களின் டெம்ப்ளெட் இதிலும் உண்டு.
கதையாகவோ, உணர்வாகவோ இல்லாமல் ஆங்காங்கே காட்சிகளாக கவனம் ஈர்க்கிறான் இரத்னம். இரண்டாம் பாதியில் வரும் அய்யர் குடும்பத்து எபிசோடும், அவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தேங்காய் உடைப்பது போல், பூசணிக்காய் வெட்டுவது போல், போன்ற வசன்ங்கள் சிரிப்பலைகளை வெளிப்படுத்த வைக்கிறது.
ஓரிரு காட்சிகளில் உணர்வெழுச்சிகள் இருந்தாலும் ஒட்டு மொத்த திரைப்படமாக எந்தவொரு உணர்வையும் மீட்டுருவாக்கம் செய்யாத படமாக ரத்னம் சுருங்கிப் போகிறான். வழக்கமான திருப்பமாக அமைந்துவிடக் கூடாது என்று பார்த்து பார்த்து புதுமை என்ற நோக்கில் வைக்கப்பட்ட திருப்பங்கள் பழமையைவிட மோசமாக இருப்பதும் பெரும் சறுக்கல். பெண்ணின் மானம், தற்கொலை, தன் தாயின் வாழ்க்கை தொடர்பாக நாயகன் பேசுவது, சிறுபெண்ணிடம் அத்துமீறுவது தொடர்பான காட்சிகள் இன்னும் கொஞ்சம் மேம்பட்ட புரிதலுடன் அமைக்கப்பட்டிருந்திருக்கலாம். இதிலெல்லாம் பழமைவாதத்தின் வாடை மிக அதிகம்.
மொத்தத்தில் ரத்னம் விலைமதிப்பற்றவன் என்று சொல்ல முடியாதவன்.
மதிப்பெண் 2.5 / 5.0