ராமாயணா: தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா – திரை விமர்சனம்

அயோத்தியில் அரசராக பதவி ஏற்க இருந்த ராமர் மந்தாரையின் சூழ்ச்சியால் 14 வருடம் காட்டுக்கு போக நேரிடுகிறது. மனைவி சீதை, தம்பி லட்சுமணனும் உடன் போகிறார்கள். காட்டில் லட்சுமணனை பார்த்த மாத்திரத்தில் ராவணனின் தங்கை சூர்ப்ப னகைக்கு காதல் பிறக்க, அதை சூர்ப்பனகை லட்சுமணனிடமே சொல்லும் போது லட்சுமணனின் வாள் சூர்ப்பனகை மூக்கை பதம் பார்த்து விடுகிறது. மூக்கை இழந்த சூர்ப்பனகை தனது புகாரை தனது அண்ணனும் இலங்கை வேந்தனுமான ராவணனிடம் கொண்டு போக…

அதற்கு பழிவாங்கும் நோக்கில் ராவணன் சீதையை சிறை எடுக்க…
சுக்ரீவன் தலைமையிலான வானர படை உதவியுடன் ராவணனை போரில் வென்று சீதையை மீட்ட கதை. அதை அனிமேஷனில் திகட்ட திகட்ட தந்து இருக்கிறார்கள்.

படத்தின் சிறப்பம்சம் நேர்த்தியான தமிழ் டப்பிங். குரல் கொடுத்தவர்கள் ராமாயண காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.கும்பகர்ணனின் பிரம்மாண்ட தோற்றம், ராவணனிடம் இருந்து சீதையை மீட்க போராடி உயிரைவிடும் ஜடாயு பறவை, ராமன்- ராவணன் போரிடும் கிளைமாக்ஸ் காட்சி, லட்சுமணனை காப்பாற்ற மூலிகை இருக்கும் மலையையே பெயர்த்து கொண்டு வரும் அனுமான் உள்ளிட்ட காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் தனி கவனம் பெறுகின்றன.

வி.விஜயேந்திர பிரசாத் இயக்கத்தில் சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்த ராமாயணக் கதை சென்று சேர்ந்து விடுகிறது. ராமன் சீதையை மட்டுமல்ல, இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்டு கிடந்த பல அடிமைகளையும் மீட்டு வந்ததாக காட்டப்படுவது புராணம் தெரியாதவர்களுக்கு நிச்சயம் புதிய தகவலாக இருக்கும்.

Related posts

Leave a Comment