அடுத்த தலைமுறை அரசியலை பேசும் படம். அதை முடிந்தவரை கலகலப்பாக சொல்ல முயன்று இருக்கிறார்கள்.
அரசியல்வாதி யோகி பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் பிறந்த நிலையில் வீட்டு வேலைக்கு வந்த வட மாநில பணிப்பெண் மூலமும் ஒரு மகனை பெற்றுக் கொள்கிறார். வட மாநில பெண்ணுக்கு பிறந்த மகன் சிறுவயதாக இருக்கும் போதே தாயையும் மகனையும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.
நாட்களின் வேகமான நகர்வில் ஒரே பள்ளியில் மகன்கள் இருவரும் படிக்கிறார்கள். இருவருமே அரசியல் கனவுடன் வளர்கிறார்கள். இருவரின் லட்சியமுமே எதிர்காலத்தில் அரசியலில் உச்சம் தொட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே. இருவரின் கனவும் நனவானதா என்பது கிளைமாக்ஸ்.
குற்ற உணர்வு இல்லாத இந்த அரசியல்வாதி கேரக்டரில் காமெடி, கலகலப்பு என ரசிகனை சிரிக்க வைக்கும் வேலையை செவ்வனே செய்கிறார், யோகி பாபு. சில இடங்களில் சிரிப்பு மிஸ்ஸிங்.
யோகிபாபுவின் வாரிசுகள் இமயவர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் பள்ளியில் படிக்கிற அரசியல் பாடங்கள் ரசனைக்குரியவை. பள்ளி மாணவர் தலைவர் தேர்தலுக்கு நிற்கும் இமயவர்மன் சக மாணவிக்காக அதை விட்டுக் கொடுக்கும் இடத்தில் நவீன அரசியல் எட்டிப் பார்க்கிறது. வயதுக்கு மேலே சேட்டைகளை இரு வாரிசுகளும் செய்த போதிலும் அவர்களின் பள்ளி அரசியல் ரசிக்கத் தக்கதே. இருப்பினும் வீடியோ கதை சொல்லி தலைமை ஆசிரியரை மிரட்டுவதெல்லாம் டூ மச்.
ஆளுங்கட்சி தலைவராக முதல்வராக செந்தில். அரசியல் சூட்சுமத்தை சிரித்தபடியே கையாளும் காட்சிகள் எல்லாம் அவரது நடிப்பு அனுபவத்தை சொல்லாமல் சொல்லுகின்றன.
தொட்டது எதுவும் தொடங்காத அரசியல் தலைவராக சுப்பு பஞ்சு அந்த கேரக்டரில் அடக்கி வாசிக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அந்த தலைமையாசிரியர் கேரக்டரில் சித்ரா லட்சுமணன் நிறைவு.
கோவில் குருக்களாக பருத்திவீரன் சரவணன், அவரது மகளாக ஹரிகா பெட்டா பொருத்தமான பாத்திரத் தேர்வு
கள். சில காட்சிகளே என்றாலும் மயில்சாமி மனசெல்லாம் நிரம்பி நிற்கிறார்.
சாதகப் பறவைகள் சங்கர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு இணைந்த அழகு.
சங்கர் தயாள் இயக்கியிருக்கிறார். சகுனி படத்தில் ஒரு வித அரசியல் சொன்னவர் இதில் இன்னொரு ஜானர் அரசியலை சொல்லி இருக்கிறார்.
அரசியல் விளையாட்டு.