சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார்.
புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘தாய் கிழவி’ திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, ‘வேலும் மயிலும்’ வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ‘தாய் கிழவி’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘சேயோன்’ படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.
தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘வேலும் மயிலும்’ பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.
இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.
இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.

