பின்னணி இசையும், ஒளிப்பதிவும், விஷுவல் எஃபெக்ட்ஸும், பார்க்கும் பார்வையாளர்களையும் நியூ யார்க் தெருக்களில் கட்டடங்களுக்கு மத்தியில் ஸ்பைடர் மேனுடன் பறக்க வைக்கின்றன. அற்புதமான விஷுவல் ட்ரீட்க்கு உத்திரவாதம் அளித்துள்ளனர் மார்வெல் ஸ்டுடியோஸ்.
பீட்டர் பார்க்கர் யார் என உலகம் மறந்தும் விடும்படி மாயமந்திரம் போட்டு விடுகிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். அனைவரும் தன்னை யாரென மறந்துவிட்ட உலகில், பீட்டர் பார்க்கரின் தனிமையோடு படம் தொடங்குகிறது. நட்பாகப் பழகக்கூடிய ஏரியா பையன் போல் ஸ்பைடர் மேன், நியூ யார்க் நகரில் குற்றங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
டேமேஜ் கன்ட்ரோல் துறையை நோக்கி ஒது பீரங்கி அதிவேகமாக முன்னேறுகிறது. ஸ்பைடர் மேன் அதை மிகக் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார். அந்த பீரங்கியை இயக்கியது ஒரு வயதான துப்பரவு தொழில் செய்யும் பெண்மணியாக இருக்கிறார். கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒரு மனிதர், அப்பெண்மணியின் மூளையில் ஊடுருவி அவரைத் தன் கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்து பீரங்கியை இயக்கிப் பெருத்த சேதம் விளைவித்துள்ளார். அந்தப் பெண்மணியில் இருந்து ஒவ்வொருவர் மனிதராக அந்த கன்ட்ரோல் வேகமாக மாறிக் கொண்டே உள்ளது.
இயக்குவது யார் என்றே தெரியாமல், சக மனிதர்களுள் ஊடுருவும் எதிரியைச் சமாளிக்க வேண்டிய பெரும்பொறுப்பு ஸ்பைடர் மேன் தோளில் விழுகிறது. அது மட்டுமில்லாமல், அவரது DNA-வில் ஏற்படும் மாற்றத்தால், அவரது உணர்வுகள் அதி கூர்மையாகின்றன. சின்னஞ்சிறு சத்தம் பேரோசையாக அவரை இம்சித்து, அவரது மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு மூர்க்கமாகிறார்.
ஸ்பைடர் மேன் எப்படி தன்னையும் பழையபடி மாற்றிக் கொண்டு, மனித மூளைகளை ஊடுருவி இயக்கும் நபரைக் கண்டுபிடித்துத் தடுக்கிறார் என்பதே படத்தின் கதை.
ஸ்பைடர் மேனை சூப்பர் ஹீரோவாகப் பார்க்காமல், நட்புக்காகவும் காதலுக்காகவும் ஏங்கும் நபராகவும், தனது அத்தை மே பார்க்கரை இழந்து வாடும் சாமானிய மனிதனாக அணுகியுள்ளார் இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன். சாகசங்களுக்குப் பஞ்சமில்லாத இந்தப் படத்தின் சிறப்பம்சம், படத்தில் வில்லன் என்று யாருமில்லை. ஸ்பைடர் மேனைப் போலவே மனித மனங்களை ஊடுருவும் மர்ம நபரும், தனது மனதுக்கு நெருக்கமான நபரைத் தவற விட்டுவிடுகிறார். கொடும் வில்லன்களின் மனதையே வென்றுவிடுவார் ஸ்பைடர் மேன். அதற்கு முந்தைய பாகமான ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ படமே சாட்சி. இப்படத்திலும், அவர் தனது சிறப்பான குணத்தால் உலகளாவிய பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்து வசூலில் வரலாற்றுச் சாதனை புரியப் போவது உறுதி.
