மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களை என்.ஜி.கே எந்தளவில் சந்தோஷப்படுத்தி இருக்கிறது?
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்கானிக் விவசாயம் செய்யும் சூர்யாவிற்கு நல்லது செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். செய்யும் நல்லவைகளை அதிகாரத்தில் இருந்தால் இன்னும் அதிகப்படுத்தலாம் என்று அரசியலுக்கு வர முனைகிறார் சூர்யா. அரசியலில் சூர்யா வாகை சூடினாரா? சோடை போனாரா? என்பது தான் என்.ஜி.கே.
நெருப்பாக உழைத்திருக்கிறார் சூர்யா. படம் நெடுக எந்தப் பில்டப்பும் இல்லாமல் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அபார உழைப்பு தெரிகிறது கங்ராட்ஸ்!
சாய்பல்லவி செய்யும் சின்ன சின்ன மேனரிசமும் நடுத்தர இல்லத்தரசிகளை கண் முன் கொண்டு வருகிறது. இளவரசு கதாபாத்திரம் ஒரு அதகள எம்.எல்.ஏவை நினைவுப்படுத்துகிறது. ரகுல் ப்ரீத்தி சிங் அழகாக இருக்கிறார். சில இடங்களில் தேவ் படத்தின் பாடிலாங்வேஜை காபிபேஸ்ட் பண்ணி இருக்கிறார். சூர்யா நண்பராக வரும் கேரக்டர், பொன்வண்ணன் கேரக்டர், படத்தின் வில்லன் ஆகிய கேரக்டர்களுக்கு கதையில் போதிய அளவில் அழுத்தம் தரவில்லை.
படம் ரொம்ப மெதுவாக துவங்கிறது. அப்படித் துவங்கியதில் பிரச்சனை இல்லை. ஆனால் அப்படியே தொடர்வது தான் பெரும் பிரச்சனை! ஒருசில இடங்களை இன்னும் கூர் தீட்டி இருந்தால் பட்டாசை கெத்தாக கொளுத்தி இருக்கலாம். சூர்யா கதாபாத்திரம் முன்னெடுக்கும் ஐடியாக்களில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் படத்தின் செண்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் ஆர்ட்டிபிஷியலாக இருப்பதும் சின்ன சின்ன குறைபாடு. இவையெல்லாம் சின்னச் சின்ன குறைபாடுகள் தானே தவிர படத்தைக் கொண்டாட நிறைய விசயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு சாமானியனின் மனநிலை எந்தந்த நிலையில் எல்லாம் உணர்ச்சிவசப்படும் என்பதை ஒருசில காட்சிகளில் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் அன்பே பேரன்பே பாடலில் புகுந்து விளையாடி இருக்கிறார். பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா, தான் இளையராஜாவின் ‘இளைய’ராஜா என்பதை நிரூபித்து இருக்கிறார். வசனங்கள் சில இடங்களில் அனலைக் கக்குகிறது. சில இடங்களில் பூவைப் பொழிகிறது. படத்தின் நிதானத்தை மட்டும் இன்னும் வேகப்படுத்தி இருக்கலாம். மற்றபடி என்.ஜி.கேவை ஒருமுறை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.