அதிமுக கட்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 0.பன்னீர்செல்வம்
போடி சட்டமன்றத் தொகுதியில் போடி நகராட்சி, போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், குச்சனூர், வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை, மேலச்சொக்கநாதபுரம், போ.மீனாட்சிபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. 1957- 2016 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் 4 முறையும், திமுக.3 முறையும், அதிமுக 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 1989ஆம் ஆண்டு போடியில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஏறத்தாழ 2 .77 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். முதலில், ஓபிஎஸ் போடி தொகுதியில், 2011ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார் . 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார்.
தற்போது மூன்றாவது முறையாகப் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, போடிநாயக்கனூர் எல்லையில் உள்ள சாலைக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, பாஜகவினர், அதிமுகவினரால் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் போடி தாலுகா அலுவலகத்துக்கு சென்று தேர்தல் அலுவலர் விஜயாவிடம் வேட்புமனு அளித்தார். ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கட்சி தொண்டர்கள் கோஷம் எழுப்பி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2011 தேர்தலில் இப்பகுதி மக்கள் எனக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்தனர். போடி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். போடி மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். இரண்டு முறை வெற்றியைக் கொடுத்த மக்கள் இந்த முறையும் வெற்றியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்” என்று கூறினார்.போடி தொகுதியில் 3ஆவது முறையாகப் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது