விஜயபாஸ்கருக்கு எதிராக அதிமுக உறுப்பினர் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து அதிமுகவில் இருந்தே ஒருவர் சுயேச்சை வேட்பாளராக நேற்று (மார்ச் 18) வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அதிமுகவில் புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே அமைச்சர் விஜயபாஸ்கர்தான் என்று ஆகிவிட்ட நிலையில்… இன்று அதிமுகவின் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் விராலி மலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“இன்று விராலி மலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த நான் விராலிமலையில் வேட்பாளராக போட்டியிடக் காரணம், அமைச்சர் விஜயபாஸ்கரின் சாதிய சர்வாதிகார அடக்கு முறைப் போக்குதான். அவர் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு எவரும் இந்த இயக்கத்தில் வளர்ந்துவிடக் கூடாது, வேறு எவரும் அதிகாரத்தில் அமர்ந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.குறிப்பாக அம்மா மறைவுக்குப் பின் விஜயபாஸ்கரின் சர்வாதிகாரப் போக்கு யாராலும் ஜீரணிக்க முடியாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. அவரது பாதங்களைப் பணிந்து சென்றால் மட்டுமே இயக்கத்தில் பயணிக்க முடியும் என்ற நிலையை அவர் உருவாக்கிவிட்டார். இன்று சமூக நீதிக்கு எதிரான சூறையாடல் அவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

எங்கள் முத்தரையர் சமூகம் போல் ஏனைய சமூகங்களும் அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கப்படுகிறார்கள். இதை அனைவருக்கும் சொல்லும் விதமாகவும், சமூக நீதியை விராலிமலையில் வென்றெடுக்கவும்தான் வேட்பு மனு வை தாக்கல் செய்துள்ளேன்” என்கிறார் நெவளிநாதன்.

இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியது ஆகாதா என்று நாம் நெவளிநாதனிடம் கேட்டபோது,

“வழக்கறிஞர் அணியின் மாவட்டப் பொறுப்பில் இருக்கும் எனக்கு கழகத்தின் சட்டதிட்டங்கள் தெரியும். அதனால்தான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் எழுதிவிட்டேன்” என்றவர் அந்தக் கடிதத்தில் தான் சுட்டிக் காட்டிய விஷயங்களை நம்மிடம் விளக்கினார்.

“ஆலங்குடி தொகுதியில் நான் கட்சிக்காக 22 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைவிட சீனியர்களும் கட்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆலங்குடி தொகுதி வேட்பாளர் வாய்ப்பை அவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடாமல் 20 நாட்களுக்கு முன்பாக கட்சிக்கு வந்தவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

2015 ஆம் ஆண்டு விஜயபாஸ்கரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் திட்டமிட்டுத் தூண்டப்பட்ட சாதிப் பிரச்சினையால் 2016 தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, புதுக்கோட்டை, திருமயம் தொகுதிகளையும் மற்ற மாவட்டங்களில் ஒரத்தநாடு, அருப்புக்கோட்டை, உள்ளிட்ட 30 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இத்தொகுதிகளில் வாழும் முத்தரையர் சமூக மக்கள் அதிமுகவைப் புறக்கணித்ததற்கு 2015 புதுக்கோட்டை சம்பவம் ஒரு முக்கியக் காரணம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஆலங்குடி, திருமயம், விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் பெரும்பான்மையாகவும், அறந்தாங்கி,கந்தர்வக் கோட்டையில் வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் இருப்பவர்கள் முத்தரையர்கள். ஆனால் இந்த சமூகத்துக்கு ஒரு தொகுதி மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதுவும் கூட்டணிக்கு போனால் இல்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தும் அதில் ஒரு மாவட்டச் செயலாளராக முத்தரையர் சமூகத்துக்குக் கொடுக்காமல் இரண்டு மாவட்டச் செயலாளர் பதவிகளும் முக்குலத்தோர் சமூகத்துக்கே தரப்பட்டுள்ளன. ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கும் இதே நிலைமைதான்.

என் கேள்விகள் அனைத்தும் முத்தரையர் சமூக மக்களைப் பற்றி இருப்பதால் மற்ற சமூக மக்கள் அரசியல் அதிகாரத்தோடு இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. எனது போராட்டம் முத்தரையர் சமுதாயத்தைப் போலவே அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் மற்ற சமூகத்தினருக்கும் சேர்த்துதான்.

எனவே என்னுடைய கேள்விகளை எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், காலமெல்லாம் கட்சி விசுவாசம் என்ற பெயரில் சமூக நீதியை அழித்துவிடக் கூடாது என்பதற்காகவும், 2021 தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்.

இத்தகைய செயலை ராணுவக் கட்டுப்பாட்டோடு இருக்கும் மாபெரும் இயக்கத்தில் இருந்துகொண்டு செய்ய நான் விரும்பவில்லை. ஆகவே அம்மாவால் எனக்கு தரப்பட்ட மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் பதவியில் இருந்தும் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவிக்கும்படி வேண்டுகிறேன்”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நெவளிநாதன்.

இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது பிரதிநிதி ஒருவர் மூலம் நேரில் கொடுத்துவிட்டு கடிதத்தை ஓபிஎஸ் சுக்கும், ஈபிஎஸ்சுக்கும் பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார் நெவளிநாதன்.

வேட்பு மனு தாக்கல் செய்த தகவல் ஊடகங்களில் வந்ததும் அதிமுக தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் மேலும் சில தலைமைக் கழக நிர்வாகிகள் நெவளிநாதனைத் தொடர்புகொண்டு சமாதானம் பேசியுள்ளார்கள். அவர்களிடம், “நான் கட்சியை எதிர்க்கவில்லை. விஜயபாஸ்கரைதான் எதிர்க்கிறேன். அவரது பேச்சைக் கேட்டு என்னை டேமேஜ் செய்தால் மேலும் பல விஷயங்களையும் வெளிக்கொண்டுவருவேன்” என்று எசசரித்திருக்கிறார்.

“விஜயபாஸ்கருக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் நெடுநாட்களாக ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் அதை நெவளிநாதன் இன்று செய்திருக்கிறார். நெவளிநாதன் வெல்வாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததன் மூலம் விஜயபாஸ்கரின் பாக்கெட்டில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறது என்ற செய்தியை வெளியே சொல்லிவிட்டார். இதுவே இப்போது முக்கியம்” என்கிறார்கள் விஜயபாஸ்கரால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை அதிமுகவினர்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் கருத்தறிய முயன்றோம்.அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. “அமைச்சரின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர் சாதி பேதம் இல்லாமல் மக்களுடன் பழகிக் கொண்டிருக்கிறார்.அவரால் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதே தவிர எங்கும் பிரச்சினை ஏற்பட்டதில்லை.மக்கள் என்றும் அமைச்சர் பக்கம்” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Related posts

Leave a Comment