தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ராயபுரம் தொகுதியின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றோம் .
கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்தும், தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் வலம் வந்தும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஏழாவது முறையாக ஒரே தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். கடந்த 6 முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது ஏழாவது முறையாக அவரே போட்டியிடுகிறார் எப்படி சாத்தியம் என்பது குறித்து பொதுமக்களிடம் பேச ஆரம்பித்தோம்.
அப்போது அவர்கள் சொன்ன பதில் இதோ உங்கள் பார்வைக்கு… 68 வயதான தங்கம் என்ற பெண்மணியிடம் ஏன் ஜெயக்குமாருக்கு ஓட்டு போடுறீங்க வேற யாருக்கும் போட மாட்டீங்களா என்று கேட்ட போது, “எதுக்குயா போடணும் மத்தவங்களுக்கு ,அவரு எங்க தொகுதிய நல்லா வச்சுருக்காரு, எங்களுக்கு எந்த கொறயும் வராம பாத்துப்பாரு, ஒவ்வொரு வீட்டுலயும் போய் கேட்டுப்பாரு, யாரு எந்த உதவி கேட்டாலும் செஞ்சு குடுக்கிறாரு.. அரசு பணம் மட்டுமில்லயா அவரு பணத்தையும் எடுத்து எங்களுக்கு செலவு செய்றாரு,அப்புறம் எதுக்கு இன்னொருத்தருக்கு நாங்க வோட்டு போடணும் ,அவர் எங்க வூட்டுப்புள்ள இந்த தொகுதியோட புள்ள நல்லாயிருக்கணும்” என்கிறார்.
சுந்தர் என்ற ஐடி நிறுவன ஊழியரிடம் கேட்டபோது, ஜெயக்குமார் சார் மாதிரி யாராலும் பண்ண முடியாதுங்க ,தன்னோட வீட்டு வாசல்ல அவருடைய போன் நம்பர் எழுதி போர்டே வெச்சிருக்காரு,.வெறுமனே போர்டு மட்டும் இல்ல அந்த நம்பர்ல எப்ப கூப்பிட்டாலும் அவரே எடுத்து பேசுவாரு தொகுதியில என்ன பிரச்சனை வந்தாலும் ஈஸியா அவர்கிட்டயே பேசி நல்ல தீர்வு கிடைக்குது. எப்ப பாத்தாலும் அவர் வீட்டு முன்னாடி ஒரு கூட்டம் உதவி கேட்டு நின்னுகிட்டே இருக்கும். சலிக்காம எல்லாருக்கும் உதவி பண்றார்,அதனால அவருக்கு ஓட்டு போடுறது தான் பொருத்தமா இருக்கும் என்கிறார்.
80 வயது மதிக்கத்தக்க தாமஸ் என்ற மீனவரிடம் கேட்டபோது ,”அவங்க அப்பா காலத்திலிருந்து நான் பாத்துக்கிட்டுருக்கேன்.அவங்க அப்பா இந்த தொகுதிக்காக எவ்வளவோ செஞ்சிருக்காரு, அந்த மாரி அவரு புள்ள செயக்குமாரு ரொம்ப நல்லாத்தான்யா பண்ணிக்கிட்டுருக்காரு, அதனால தான் அவரு எல்லா தடவயும் செயிக்காரு,இந்த இந்தவாட்டியும் செயிப்பாரு பாரு…எங்க வூட்டுல பதிமூணு வோட்டு இருக்கு,பதிமூணு ஓட்டும் எப்பவுமே அவுருக்கு மட்டும்தான்யா… நான் கட்சிக்காரன் கெடையாது.
ஆனா செயக்குமாரு நல்ல மனுஷன் வேணும்னா ஊருக்குள்ள போயி கேட்டு பாரு தம்பி யார் யாருக்கு எவ்ளோ உதவி செஞ்சிருக்காருன்னு தெரியும்.அதனால அந்த மனுசன் இப்பவும் செயிக்கணும்னு கடவுள கேக்குறன்” என்றார்.
இப்படி சுமார் 30க்கும் மேற்பட்ட ராயபுரம் தொகுதிவாசிகளிடம் கேட்டபோது,கட்சிகளை மறந்து அனைத்து பொது மக்களின் நலனுக்காக ஏராளமான உதவிகளை ஜெயக்குமார் செய்து வந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிந்தது. எனவே தான் ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் ரகசியம் தெரியவந்தது.