எங்கள் கூட்டணிதான் முதன்மையான கூட்டணி என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சொல்லிவருகிறார். அதேநேரம் உட்கட்சியில் அவர் நடத்திவரும் ஆலோசனையில், ‘நாம் அதிகபட்சம் எவ்வளவு தொகுதிகளில் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம்.ஆனால் குறைந்தது பத்து தொகுதிகளாவது ஜெயிக்க வேண்டும்’என்று ஆணையிட்டிருக்கிறார்.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் அலசி ஆராய்ந்து டாப் டென் தொகுதிகளைத் தேர்வு செய்தவர் 2021இல் குறைந்தபட்சம் பத்து எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்றத்தில் அமரவேண்டும் என அனைத்து விதமான வேலைகளையும் செய்துவருகிறார்.
அந்த தொகுதிகள்…
1. கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராகத் தினகரன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு, கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் களத்தில் உள்ளார்,
2. பாபநாசம் அமமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ, ரங்கசாமி, அதிமுக வேட்பாளராகக் கோபிநாதனும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரும் மோதிவருகிறார்கள்.
3.பாப்பிரெட்டிப்பட்டி அமமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அதிமுக வேட்பாளராக இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற கோவிந்தன், திமுக வேட்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் அண்ணன் மருமகன் டாக்டர் பிரபு ராஜசேகர் போட்டியிடுகிறார்.
4. திருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து புதல்வர் டேவிட் அண்ணாதுரையும், அதிமுக வேட்பாளராக ராஜன் செல்லப்பா, திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுதாயும் களத்தில் உள்ளனர்.
5. முதுகுளத்தூர் அமமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ முருகன், அதிமுக வேட்பாளராக கீர்த்திகா முனுசாமியை அறிவித்துள்ளனர். திமுக வேட்பாளராக ராஜகண்ணப்பன் இறங்கியுள்ளார்.
6. குன்னூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் கலைச்செல்வன், அதிமுக வேட்பாளர் கப்பிச்சி வினோத், திமுக வேட்பாளராக ராமச்சந்திரன் மோதுகிறார்.
7. காரைக்குடி-அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக ஹெஜ் ராஜாவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மான்குடியும் போட்டியிடுகிறார்கள்.
8. பொள்ளாச்சி- அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி சுகுமார், அதிமுக வேட்பாளராகப் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக வேட்பாளராக டாக்டர் வரதராஜன் களம் காண்கிறார்கள்.
9, உசிலம்பட்டி-அமமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், அதிமுக வேட்பாளர் அய்யப்பன், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆகியோர் மோதுகிறார்கள்.
10. திருவாடானை தொகுதியில் அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நடராஜன் மகன் விடிஎன் ஆனந்த், அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ஆணிமுத்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கருமாணிக்கம் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, சாதி பலம், சசிகலா குடும்பத்தினரால் பலன் பெற்றுள்ளவர்கள் சார்ந்த வாக்குகள், நாயுடு சமூகம் நிறைந்துள்ள தொகுதிகளை தேர்வு செய்துள்ளார் தினகரன்.
“இந்த பத்து தொகுதிகளையும் நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறோம். இங்கே அனைத்து விதத்திலும் முதன்மையாகச் செயல்பட்டுவருகிறோம்” என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள்.