அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை தனுஷ் முந்திவிடுவார் போல தெரிகிறது. அந்த அளவுக்கு மாதத்துக்கு ஒரு பட அறிவிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனுஷின் ஒவ்வொரு புது அறிவிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
சமீபத்தில், தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தனுஷுக்கு நீண்ட நாளாக தெலுங்கில் நடிக்க வேண்டுமென்பது ஆசை. இவரின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், தனுஷ் படங்கள் தெலுங்கில் பொதுவாக டப்பாகி வெளியாகும். இது, முதல் நேரடித் தெலுங்குப் படமாக உருவாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியிலும் என PAN இந்தியா ரிலீஸாகப் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. நூறு கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதாகவும் தகவல். மேலும், தனுஷுக்கு அதிக சம்பளம் பெரும் படமாகவும் இது இருக்கும் என்கிறார்கள்.
இந்த ஆச்சரியங்களே ரசிகர்களை மிரளவைத்து வரும் நேரத்தில், புதிய சர்ப்ரைஸ் ஒன்றையும் கொடுக்க இருக்கிறார் தனுஷ். சேகர் கம்முலா படத்தைத் தொடர்ந்து மீண்டுமொரு பைலிங்குவல் படமொன்றை ஒப்பந்தம் செய்ய இருக்கிறாராம் தனுஷ். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனத்திலிருந்து தனுஷுடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல். தமிழ் – தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
தமிழிலும், இந்தியிலும் நடிகராகக் கலக்கிவருகிறவர், அதோடு அவெஞ்சர் பட இயக்குநர் ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படத்தில் நடித்திருப்பதால் உலகளவில் கவனம் பெற்ற நடிகராகிவிட்டார் தனுஷ். அதனால், அந்த தனுஷை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்துவருகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் தனுஷ், முதல்கட்டமாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து, தனுஷின் 44ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அப்டேட் என்னவென்றால், மூன்று வாரத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். குறைவான நேரத்தில் எடுத்துமுடிக்கக் கூடிய கதையாம்.
தனுஷின் 46ஆவது படத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறார். தாணு தயாரிக்க ‘நானே வருவேன்’ எனும் இந்தப் படம் ஆகஸ்ட் 20இல் தொடங்குகிறது. இதற்குப் பிறகே சேகர் கம்முலா படத்தில் நடிக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.