மாயன் படத்தில்கதையின் நாயகனாக சிவபெருமான்

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு சிவபெருமானை கதையின் நாயகனாக கொண்ட படமாக ‘மாயன்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த பிரம்மாண்டமான பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் தயாரித்துள்ளார்.

முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் மூவரும் நடித்துள்ளனர்.

மேலும் ஜான் விஜய், தீனா, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், கே.கே.மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆங்கில பதிப்பில் இவர்கள் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்கள்.

பின்னணி இசை – ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – அருண் பிரசாத், கலை இயக்கம் – வனராஜ், வி.எஃப்.எக்ஸ். – ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பு – நிவேதா ஜோசப், யோகீசன்.

தயாரிப்பாளரான ராஜேஷ் கண்ணாவே இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் நான்கு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இந்த மாயன் படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் கண்ணன் பேசுகையில், “மாயன்’ என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், ‘மாயன் காலண்டரை’யும் நினைத்துக் கொள்கிறோம். அது தவறு.

‘மாயன்’ என்றால் ‘கால பைரவனின் பிள்ளைகள்’ என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் இந்த ‘மாயர்’களே.

அப்பேர்ப்பட்ட மாயர்களுக்கும். நம் மூதாதையர்களும் ஒரு பெரிய உறவு இருக்கிறது. அந்த வரலாற்று உறவின் அடிப்படைதான் இந்த ‘மாயன்’ படத்தின் கதைக் கரு.

‘மாயன்’ என்பது மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக் கொண்டால் அது இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டது. ஆனால், ‘சிவன்’ என்று எடுத்துக் கொண்டால் அதற்கும் மேல் செல்கிறது. என்னைப் பொருத்தவரை சிவன்தான் ‘மாயன்’.

முதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும்போதுதான் வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும்.

ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்ன செய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும். அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும். அதைபோல் இப்போது மனிதர்களும் தங்களைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவன் இவர்களையெல்லாம் ஏன் படைத்தோம் என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாக இருந்திருக்கும்? எப்படியிருந்திருக்கும்..? அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்..? அதுதான் இந்த ‘மாயன்’ திரைப்படம்.

இந்த மாயன் ஒரு ஃபேண்டசி மற்றும் ரியாலிட்டி கலந்த திரைப்படம். இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வதுதான் இந்த ‘மாயன்’ திரைப்படம்.

சின்ன வயதில் தப்பு செய்தால் “சாமி கண்ணைக் குத்தும்” என்று சொல்லிச் சொல்லியேதான் நம்மை நமது பெற்றோர்கள் வளர்த்தார்கள். அது உண்மையா..? பொய்யா..? என்பதையும் இதில் சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம்.

கர்மா என்ற ஒன்று இருக்கிறது. அதனை செயல் வினை என்றும் சொல்லலாம். நாம் நல்ல செயல்களை செய்தால் கர்மா, செயல் வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய் வினை ஆகிறது. மனிதர்களில் சம நிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.

நம்முடைய பெருமைகளையும், கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளைவிட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும். அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம்.

இந்தப் படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக் கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும்.. எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் தானாகவே இணைந்துவிடும்.

சிவ பெருமானை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை இதில் நாயகனாக்கியிருக்கிறேன்…” என்றார்.

Related posts

Leave a Comment